நான் ‘வெட்ட’ச் சொல்லவில்லை: கோட்டா வாக்கு மூலம்

🕔 July 10, 2017

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் பெறுமதிமிக்க 600 டொன் எடையுள்ள இயந்திரங்களை, பழைய இரும்பாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு, தான் ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை என்று, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

கோட்டாவின் வாக்கு மூலம், சத்தியக் கடிதம் வழியாக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாவின் எழுத்துமூலமான அனுமதியுடனேயே, குறித்த இயந்திரங்களை இரும்புகளாக வெட்டி அகற்றுவதற்கு அனுமதி வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இது குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக, இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கோட்டா அழைக்கப்பட்டிருந்ததுடன், சத்தியக் கடிதம் மூலம் அவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ராணுவ தளபதி தயா ரத்நாயக்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய எனஸ்லி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சிறிபால ஹெட்டியராச்சி ஆகியோருக்கு, எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்