புதிய தேர்தல் முறையினால் இழைக்கப் போகும் சதிகளுக்கு, தமிழரசுக் கட்சி துணை போகக் கூடாது: மாவையிடம் றிசாத் கோரிக்கை

🕔 July 10, 2017

 

– சுஐப் எம் காசிம் –

பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து, சிறுபான்மை மக்களுக்கு தேர்தல் முறை மாற்றத்தின் மூலம் இழைக்கப் போகும் சதி முயற்சிகளுக்கு, தமிழரசுக் கட்சி ஒருபோதும் துணை போகக்கூடாது என்று, தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜ முன்னிலையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்‘  எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே, மேற்கண்ட கோரிக்கையை றிசாத் பதியுதீன் முன்வைத்தார்.

கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் முழக்கம் அப்துல்மஜீத், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஏ.எம். ஜெமீல்,  மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான அப்துல் மஜீத், முன்னாள் உபவேந்தர் எஸ்.எம். இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் மற்றும் நிந்தவூர் பிரதேச சபைியன் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹீர், உட்பட நீதிபதிகள்,புத்திஜீவிகள் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் எனப் பல்த்துறை சார்ந்தோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது,

“முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்கள். அதை நாங்கள் மன்னித்துவிட்டோம், மறந்துவிட்டோம். 25வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கறைபடிந்த நிகழ்வு ஒரு செய்தியாக இப்போது போய்விட்டது. எனினும் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் பொறுப்பும் கடமையும் தற்போது வடமாகாணத்தில் ஆட்சியிலுள்ள மாகாண சபைக்கு இருக்கின்றது. மீள்குடியேற்றத்துக்கு இந்த மாகாணசபை உதவும் போது தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கிடையே நிலவுகின்ற சின்னச்சின்னப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, ஒற்றுமையாக வாழ்கின்ற நல்ல சூழல் ஒன்று உருவாகக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்தக் குடியேற்றத்துடன் சேர்ந்த ஓர் சமூக இணைப்பு பாலத்தையும் உருவாக்க முடியும். ஆனால் வடமாகாண சபை அதனை தட்டிக்கழிக்கின்றது.

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கச்சேரியில் அரசாங்க அதிபரின் தலைமையில் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். முதமைச்சர் விக்னேஸ்வரன் இந்தக் கூட்டம் தொடர்பில் யாழ் அரச அதிபரிடம் இப்போது விளக்கக் கடிதம் கோரியிருப்பதாக அறிகின்றோம். அதே போன்று மன்னாரில் மயான பூமியொன்று நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரு தனிநபருக்கு சொந்தமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு சமூகங்களுக்குமிடையே பெரிய மோதல் ஒன்று உருவாகும் நிலைமை அங்கு ஏற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அதற்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.

அதே வேளை அதே கட்சியின் இன்னுமொரு மாகாண சபை அமைச்சர் டெனீஸ்வரன், இந்த விடயத்தை சமரசம் செய்யும் முயற்சியில் என்னுடன் இணைந்து நேர்மையாக செயற்பட்டமை பாராட்டப்பட வேண்டியது. சின்னஞ்சிறிய விடயங்கள்தான் எங்களுக்குள் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது. வடக்கு கிழக்கிலே முஸ்லிம்கள், மூன்றில் ஒரு பகுதியினராக வாழ்கின்ற போதும் அதற்கு வெளியே மூன்றில் இரண்டு பகுதியினர் சிதறி வாழ்கின்றனர்.

மாகாண அதிகாரங்களை அதிகரிக்கும் விடயத்திலே நாங்கள் பல்வேறு விட்டுக்கொடுப்புகளுடன் ஒத்துழைத்து வருகின்றோம்.  தனிநாடு கேட்டு போராடிய ஒரு சமூகம், சமஷ்டியை எதிர்பார்த்திருக்கும் ஒரு சமூகம், நீண்டகால அழிவை எதிர்நோக்கிய சமூகம், இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறும் ஒரு சமூகம், தாம் இருக்கும் மாகாணத்திலாவது அதிக அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ வேண்டுமென்ற நியாயத்தை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும் வடக்கு கிழக்கிலே அதிகாரங்கள் அதிகரிக்கப்படும் போது, வடக்கு கிழக்குக்கு வெளியே ஏழு மாகாணங்களில் சிதறி வாழும் முஸ்லிம், தமிழ் மற்றும், மலையக சமூகங்களுக்கு ஆபத்தும் இல்லாமல் இல்லை. மாகாண அதிகாரங்கள் பிரிகின்ற போது, சில விடயங்களை நாங்கள் சிந்திக்காமல் இருக்கவும் முடியாது. அரசியலமைப்புச்சபை 0வருடமாக கூடி வருகின்றது. இந்தக்கூட்டங்களிலே தமிழரசுக் கட்சி, ஏனைய சிறுபான்மை சிறுகட்சிகள் மற்றும் அமைச்சர் மனோகணேஷன் தலைமையிலான கட்சி ஆகியவை மனந்திறந்து பல விடயங்களை விவாதித்து ஒருமித்து இயங்குகின்றோம்.  

புதிய அரசாங்கமானது அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறையில் மாற்றம் ஆகியவற்றை கொண்டு வரும் எத்தனங்களில் ஈடுபட்டுள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்திற்குள்ளே தேர்தல் முறை மாற்றத்தையும் புகுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களை பொறுத்தவரையில் குறிப்பாக சிதறிவாழும் முஸ்லிம்களுக்கு, தேர்தல் முறை மாற்றம் பாரிய பாதிப்புக்களை உருவாக்கும் என்ற அச்சம் எங்கள் மனதை நெருடிக்கொண்டு இருக்கின்றது.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் அநுராதபுரம், கேகாலை ஆகிய இடங்களில் எமது பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய துர்பாக்கியம் இருக்கின்றது. அதே போன்று கொழும்பில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அடிபடக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.  சிறுபான்மையினர் சிதறி வாழும் இடங்களிலெல்லாம் பெரிய பாதிப்பை புதிய தேர்தல் முறை மாற்றம் ஏற்படுத்தப்போகின்றது.

அந்த ஆட்சியை விரட்டி, நல்லாட்சியைக் கொண்டு வந்தோம் என்று பெருமையாக பேசிய நாங்கள், இன்று துன்பத்தில் மூழ்கிக்கொண்டு வருகின்றோம். பல்லாயிரக்கணக்கான காணிகளைப் பறிகொடுத்துவிட்டோம். வனவளத் திணைக்களம்,  வன ஜீவராசிகள் திணைக்களம் என்ற போர்வையிலே காணிகள் கபளிகரம் செய்யப்பட்டு வருகின்றன. நல்லாட்சி, நன்றியுடைய ஆட்சியாக இருந்தால் ஒரே நாளிலேயே எங்களது பூர்வீகக் காணிகளை விடுவித்துத் தர முடியும். ஆனால் அவர்களிடத்தில் இந்த மனோபாவம் இருப்பதாக தெரியவில்லை. வில்பத்து, வில்பத்து என்று அன்றும், இன்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். வில்பத்துக்கும் மன்னாருக்கும் எந்த சம்மந்தமுமே இல்லை.

இந்தப் பிரதேசங்களில் மக்கள் வாழ்ந்து வெளியேறிய பின்னர் 25 வருடங்கள் காடுகளாக போயின. கொழும்பில் இருந்துகொண்டே வனவளத்திற்கு இவற்றை சொந்தமாக்கியுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் உட்பட பல பிரதேசங்களில் பல ஆயிரக்கணக்கான காணிகளை வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கி அநியாயம் செய்திருக்கின்றார்கள். ஆனால் இந்த விடயத்தை யாரும் தட்டிக்கேட்காதனாலும் சுட்டிக்காட்டாததனாலும், போராடாததனாலும் எமது சமூகம் பார்ப்பார், கேட்பாரற்ற சமூகமாக இருக்கின்றது.

இந்தப் பிரச்சினை இந்த மாவட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் நாங்கள் வடமாகாணத்திலே இதனைத் தட்டிக்கேட்கின்றோம். போராடுகின்றோம். எதிர்த்து நிற்கின்றோம். எங்களுக்கெதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது, எதிர் வழக்குகளை போடுகின்றோம். நாங்களும், எங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக வழக்கு போடுகின்றோம். இதனால்தான் எங்களை குற்றவாளிகளாகப் பார்க்கின்றார்கள்.  இனவாதிகளாக கருதுகின்றார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் உறவு பிரிவதற்கு நாங்கள் ஒரு போதும் துணையாக இருக்கப் போவதில்லை. தமிழ் – முஸ்லிம் உறவுக்காக பத்திரிகையாளர் சலீம் எவ்வாறு பாடுபட்டு இருக்கின்றார் என்பதை மாவை அவர்கள் இங்கு சொன்னார்கள். அதே போன்று 18 வயதிலே உடுத்த உடையுடன் பாடசாலை மாணவனாக, எமது மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் நானும் ஒருவன். பல்வேறு துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும்ம், சவால்களுக்கும் முகங்கொடுத்து ஒரு லட்சியத்தை நோக்கி பயணித்தேன். எமது சகோதர மக்களை சொந்த மண்ணில் குடியேற்ற வேண்டுமென்ற அவாவுடனும் உள்ளுணர்வோடும்தான் அரசியலுக்கு வந்தேன்.

மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, யுத்த இறுதிக்காலத்தில் அந்த மண்ணுக்கு நான் சென்றபோது, என் கண்முன்னே நின்றவர்கள் யுத்தக் கொடூரத்தில் வெளியேறி, அத்தனையையும் இழந்து அகதியாகிப் போன  மூன்றரை லட்சம் தமிழ் மக்களே. உடுத்த உடையுடன் நிர்க்கதியாகி ஊனமுற்றும், நலிவுற்றும், துன்பங்களை சுமந்துகொண்டும் தஞ்சமடைந்திருந்த அந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு மிக உச்சளவில் உதவி செய்து, அவர்களின் துன்பங்களை துடைத்தேன். பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தோம். இறைவனை முன்னிறுத்தி மிகவும் நேர்மையாக, சகோதர வாஞ்சையுடன் முடியுமான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தேன். அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுமார் ஒரு வருட காலத்தில் 70 சதவீதமானவர்களை குடியேற்றினோம். கண்ணி வெடிகளை அகற்றி அந்த மக்களுக்கு நிம்மதி பெற்றுக்கொடுத்தோம். வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

பின்னர் இந்த அமைச்சு என்னிடமிருந்து மீளப் பெறப்பட்டது. நான் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்ட மீள்குடியேற்றப் பணிகளை அதன் பின்னர் வந்த, எந்த அமைச்சரும் நேர்மையாகச் செய்யவில்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அவர்கள்  எந்த அக்கறையும் காட்டவில்லை. கைத்தொழில் அமைச்சராக இருந்து கொண்டு  முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடும், கடப்பாடும் என் முன்னே திணிக்கப்பட்டது. அவர்களோடு அகதிகளாக வந்தவன் என்ற வகையில், நான் எடுத்த முயற்சிகளுக்கெதிராக சவால்கள், முட்டுக்கட்டைகள், பல்வேறு தடைகள் ஆகியவற்றை எதிர்நோக்கி வருகின்றேன். என்மீதான பழிகளும், அபாண்டங்களும் ஏராளம். எனக்கெதிராக எத்தனையோ எழுத்துக்கள், பல்வேறு வழக்குகள். அது மட்டுமன்றி இன்னும் எத்தனையோ சதிகள். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டவனாக ஓர் இரும்பு மனிதனாக நின்று கொண்டு, இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்காகப் பாடுபடுகின்றேன். ஓர் அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்து கீழிறங்கி, பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டிருக்கின்றேன்.

தமிழ் – முஸ்லிம் உறவுக்காக நான் பாடுபட்டிருக்கின்றேன். இன்னும் பாடுபடுகின்றேன்.  மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது நான் நினைத்திருந்தால் முல்லைத்தீவிலும், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றி இருக்க முடியாதா? ஆனால் அரசாங்கத்தின் கொள்கைளை அமைச்சர் என்ற வகையில் அச்சொட்டாக நடைமுறைப்படுத்தி  நிர்க்கதியாகிப்போன, துன்பத்தில் உழன்று கொண்டிருந்த தமிழ் மக்களை மனச்சாட்சியுடன் குடியேற்றினோம். 20வருட காலம் அகதியாக இருந்து துன்பப்பட்டுகொண்டிருக்கும் முஸ்லிம் மக்களை, பிறகு குடியேற்றலாம் என எண்ணியே மெனிக்பாம் அகதிகளை முதலில் மீள்குடியேற்றினோம்.

மிகவும் நேர்மையாக நாங்கள் தமிழ் மக்களின் விடயத்திலே நடந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் முஸ்லிம்களின் விடயத்திலே ஏனோ இத்தனை சவால்களை எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது. அமைச்சர் ரிஷாட் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது, முஸ்லிம் மக்களை ஏன் குடியேற்றவில்லை? என்று தமிழரசுக் கட்சியின் மாகாண சபை அமைச்சர் ஒருவர் ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டிருந்தார். முஸ்லிம் அமைச்சர்  ஒருவர், அந்த வேளையில் அவ்வாறு நடந்து இருந்தால், நான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டிருப்பேன் என்பதை சிந்தித்துப்பாருங்கள். 42ஆயிரம் தமிழ்க்  குடும்பங்களை, நான் முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேற்றியிருக்கின்றேன். 15 ஆயிரம் கல்வீடுகளை மாகாண சபை நிர்வாகம் வருவதற்கு முன்னர் அங்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். ஆனால் முல்லைத்தீவில் 900 முஸ்லிம் குடும்பங்களை குடியேற்ற நினைக்கும் போது, நாங்கள் படுகின்றபாடு போதுமென்றாகிவிட்டது.

எமது மார்க்கம் முஸ்லிம்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டுமென்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. எங்களிடம் நியாயம் இருக்கின்றது. மனிதர்களுக்கு மேற்கொள்ளும் உதவிகளை ஒரு பேறாகவே இஸ்லாம் கருதுகின்றது.

எனவே, பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து சிறுபான்மை மக்களுக்கு தேர்தல் முறை மாற்றத்தில் இழைக்கப் போகும், சதி முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒருபோதும் துணை போகக்கூடாது என்பதை இந்த இடத்தில் அன்பாய் வேண்டுகின்றேன்.

நல்லாட்சியின் இரண்டு தலைவர்களையும் உருவாக்குவதில் எமது சமூகம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளது. எழுத்தாளர்கள், தமது எழுத்துக்களை காணிக்கைகளாக கரைத்து இந்த தலைவர்களை கொண்டு வருவதற்கு தமது நேரம், சிந்தனை எல்லாவற்றையும் செலவழித்திருக்கின்றார்கள். சமூக வலைத்தளங்கள் இரவு பகல் பாராது ஆற்றிய பங்களிப்புக்கள், வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது மாத்திரமன்றி நாம் கேட்ட பிரார்த்தனைகள் கொஞ்சநஞ்சமில்லை. எனவே, இந்த மக்களின் மீள்குடியேற்றப்பிரச்சினையாயினும் சரி, காணிப்பிரச்சினையாயினும் சரி இன்னொரன்ன எந்தப் பிரச்சினையாயினும் சரி, அவற்றினைத் தீர்த்து வைக்கும் தார்மீகப் பொறுப்பு நல்லாட்சித் தலைவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் இதனை செய்யாவிட்டால் நன்றிகெட்ட தலைமைகளாகவே பார்க்கப்படுவார்கள்.

இன்னும் 10 வருடங்களுக்குப் பின்னர் நாங்கள் இதனை விட பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியேற்படும். எனவே, தமிழ் – முஸ்லிம் தலைமைகள் இதயசுத்தியோடு பேசுவோம். தீர்வுகளைத் தேடுவோம். உரிய தீர்வுகளை அவர்களுக்கு வழங்குவோம். அதன் பின்னர், நாம் வழங்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் அப்போதுதான் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு ஏற்படும்.

தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், பெருந்தலைவர் அஷ்ரப் ஆகியோர் இன்று உயிருடன் இல்லை. தமிழ்த் தலைவர்களாக, பெருந்தலைவர்களாக சம்பந்தன், மாவை போன்றவர்கள் உயிருடன் வாழும் இந்தக் காலம் பொன்னானது. நீங்கள் இருவரும் நீடுழி வாழ வேண்டும். உங்களைப் போன்ற தலைவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம். நமது சமூகங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட ஒரு கூட்டம் செயற்படுகின்றது. வெளிநாட்டு சக்திகள் இதற்காகப் பணத்தை வாரிவழங்கிக் கொண்டு இருக்கின்றன. எனவே நாங்கள் இதய சுத்தியோடு பேசுவோம், மனந்திறந்து பேசுவோம். மக்களுக்காகப் பேசுவோம், மக்களின் எதிர்காலத்திற்காக பேசுவோம், எல்லோரும் நமது சகோதரர்களே என்ற வாஞ்சையோடு பேசுவோம்.

இதனை விடுத்து 56ம் ஆண்டு ஒப்பந்தம், 72ம் ஆண்டு ஒப்பந்தம், மர்ஹும் அஷ்ரப்புடன் ஒப்பந்தம், ஹக்கீமுடன் ஒப்பந்தம் என்று சொல்லிச் சொல்லிக் கொண்டே இருப்பதில்  எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. இன்று இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு நாம் முன்னெடுத்துச் சென்றால், வெற்றி பெறமுடியும் என்பதைப் பற்றி ஆராய்வோம், அமர்ந்து பேசுவோம். தீர்வு காண்போம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரண்டு சமூகங்களின் வெற்றிக்காகவும் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது என்பதை உறுதியுடனும், கௌரவத்துடனும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போது அரசியலமைப்புச் சபையிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேச்சுக்களில் மூன்று விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து  அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள வேண்டுமென தமிழரசுக் கட்சி கோரிவருகின்றது.

பெரும்பான்மைக் கட்சி ஒன்று ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டுமென்பதில் அக்கறை காட்டுகின்றது. மற்றைய பெரும்பான்மை கட்சியானது, தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென விடாப்பிடியாக நிற்கின்றது. இந்தச் சூழ் நிலையில் சிறுபான்மை கட்சிகளான மனோ கணேசனின் கட்சி உட்பட நாங்களும், சிறுகட்சிகளும் மிகவும் கவலையுடன் இந்த பேரலையிலும் இழுபறிக்குள்ளேயும்  எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கின்றோம்.

உள்ளுராட்சி தேர்தல் முறையானது இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது. புதிய முறையிலேதான் தேர்தல் நடத்தப்படவேண்டுமென சுதந்திரக் கட்சி விடாப்பிடியாக நிற்கின்றது. எனவே, இந்த விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றோம். இந்த முறைமை வந்தால், முஸ்லிம் சமூகம் பல இடங்களில் நாடாளுமன்ற, மாகாண, உள்ளுராட்சிப் பிரதிநிதித்துவங்களை இழப்பது மட்டுமன்றி, சில இடங்களில் அவற்றினை நினைத்து பார்க்கவும் முடியாது போய்விடும்.

இந்த பாராட்டு நிகழ்விலே நான் அரசியல் பேசவேண்டுமென்று வரவில்லை. அண்ணன் மாவையும், முன்னாள் அமைச்சர் பசீரும் சில விடயங்களை தொட்டுப் பேசியதனால், பேச வேண்டி ஏற்பட்டது.

பத்திரிகையாளர் சலீம் அவர்களை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. ஊடகவியலாளர்கள் சமூக நல்லிணக்கத்துக்காகப் பாடுபட வேண்டும். அநீதிகளைத் தட்டிக்கேட்க வேண்டும்.

ஊடகவியலாளர்களின் தியாகங்களை நாங்கள் ஒரு போதும் மறந்துவிட முடியாது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் இந்த மாவட்டத்துக்குச் செய்து வரும்  பங்களிப்பை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே என்பதை, நான் இந்த இடத்தில் கூறிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

பத்திரிகையாளர் ஒருவரின் பராட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காகவே அண்ணன் மாவை, உதயன் பத்திரிகை ஆசிரியர் பிறேமானந்தன், வீரகேசரி செய்தி ஆசிரியர் ஸ்டீபன், தினக்குரல் ஆலோசகர் தனபாலசிங்கம் ஆகியோர் இவ்வளவு தூரத்திலிருந்து இங்கு வருகை தந்திருப்பது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது” என்றார்.

Comments