காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

🕔 July 7, 2017

– முன்ஸிப் அஹமட் –

சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் வலியுறுத்தினார்.

அமைச்சரை நேரில் சந்தித்த பொறியியலாளர் மன்சூர், மேற்படி வலியுறுத்தலை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனை நிறுத்துமாறு கோரி, முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் குறித்த அலுவலகத்தை இடமாற்ற வேண்டாம் என எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார்.

ஆயினும், சாய்ந்தமருது காரியாலயத்திலிருந்து அம்பாறை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டிருந்த அலுவலகச் செயற்பாடுகள், தொடர்ந்தும் அம்பாறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையிலேயே, குறித்த அலுவலகத்தை சாய்ந்தமருதிலிருந்து இடம் மாற்ற வேண்டாம் என்றும், சகல அலுவலக நடவடிக்கைகளையும் சாய்ந்தமருதில் மேற்கொள்வதற்கான உத்தரவினை வழங்குமாறும் அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வேண்டிக் கொண்டார்.

Comments