நிதி குற்றப் புலனாய்வு பிரிவு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 July 6, 2017

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் மந்தமான விசாரணைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் அறிக்கையொன்றினை அமைச்சரவை கோரியுள்ளதாகவும், அடுத்த வாரம் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

“நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகளை ஏற்க மறுத்த ஜனாதிபதி; அந்தப் பிரிவு தனது கண்காணிப்பின் கீழ் இருந்திருக்குமானால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது நடைபெற்ற பாரிய லஞ்சம், ஊழல் மற்றும் கொலைகளுடன் தொடர்பான குற்றவாளிகளை, ஆறு மாதங்களுக்குள் தண்டித்திருப்பேன் எனக் கூறினார்” என்றும், அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சியின் போது, பாரிய குற்றங்களை மேற்கொண்ட முக்கிய நபர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிறிய விவகாரங்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, வேறொரு அமைச்சுக்குச் சொந்தமான கார் ஒன்றினைப் பயன்படுத்தியமை தொடர்பில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அது – மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவை பராமரிப்பதற்காக, மாதமொன்றுக்கு அரசாங்கம் 12 லட்சம் ரூபாவினை செலவிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments