வடக்கு – கிழக்கு இணைப்பா? அப்படி நான் கூறவில்லை: மறுக்கிறார் ஹசனலி

🕔 July 4, 2017

“இணைந்த வடகிழக்கு மாகாணமே, புதிய முஸ்லிம் கூட்டணியின் இலக்கு” என்று, தான்தெரிவித்ததாக, இன்றைய தமிழ் பத்திரிகையொன்றில் வெளியான செய்தியினை, முஸ்லிம் கூட்டணியின் பிரதான பங்காளரும், முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளருமான எம்.ரி. ஹசனலி  மறுத்துள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டுமென, தான் ஒருபோதும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி, அவற்றுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதே, புதிய முஸ்லிம் கூட்டணியின் முதன்மை நோக்காகும் என்றும் அவர் கூறினார்.

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளும், அவர்களின் தேவைகளும் மலினப்படுத்தப்பட்டதாகவும் ஹசனலி கவலை வெளியிட்டார்.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஏற்றுக் கொண்டதாகவும், அதில் தமக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்றும் ஹசனலி கூறினார்.

“வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைகின்றதொரு சந்தர்ப்பம் உருவாகுமானால், அங்கு இரண்டு மாகாணங்கள் உருவாக்கப்பட்டு, தமிழ் தேசியத்துக்கும் முஸ்லிம் தேசியத்துக்கும் அவற்றில் ஆட்சியலகுகள் வழங்கப்படுதல் வேண்டும்” என்றும் ஹசனலி வலியுறுத்தினார்.

“அப்படியில்லாவிட்டால், கரையோரத்தை அடிப்படையாகக் கொண்டு தென்கிழக்கு மாகாண அலகினை முஸ்லிம்களுக்காக அடைந்து கொள்வதற்காக, முஸ்லிம் தரப்புக்களை ஒன்றுதிரட்டி, அரசியல் போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளான மேற்படி விடயங்கள், புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திய ஹசனலி; “அவ்வாறு உள்வாங்கப்படா விட்டால், அந்த யாப்பினை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்” என்றார்.

மேலும், முஸ்லிம்களின் அபிலாசைகளை உள்வாங்காத புதிய அரசியல் யாப்புக்கு ஆரதவு வழங்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமூகத் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்