ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

🕔 July 18, 2015
Hakeem - 0109
ல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்  ஹக்கீம், தனது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, இந் நன்நாளில் பிரார்த்திப்பதாகவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மு.கா. தலைவர் ரஊப்  ஹக்கீம் வெளியிட்டுள்ள, நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

புனித ரமழான் நோன்பை நோற்று, தொழுகை, திருகுர்ஆன் பாராயணம் ஆகிய ஆன்மீக மேம்பாட்டிற்கான சன்மார்க்க கடமைகளில் அதிகம் ஈடுபட்ட பின்னர், ‘ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும், உலகளாவிய முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

புனித நோன்பு – பாவக்கறைகளை அகற்றி, முஸ்லிம்களை புடம் போட்டிருக்கின்றது.

பல்வேறு நாடுகளில், முஸ்லிம்கள் – துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் சூழ்நிலையில், மீண்டுமொரு பெருநாளை சந்திக்கின்றோம். இலங்கையைப் பொறுத்தவரை குறிப்பாக நமது சமூகம் அனுபவித்துவரும் சோதனைகளிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் விடுபட்டு, ஆட்சி மாற்றத்தின் பின்னர் – சுபீட்சமான எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியிருக்கின்றது.

இந்நாட்டைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் நீங்குவதற்கு, எதிர்வரும் பொதுத் தேர்தல் வழிவகுக்குமென்று நம்புகின்றோம். நாட்டில் நல்லாட்சி நிலவவேண்டும் என்றும், அபிவிருத்தி அடைய வேண்டுமென்றும் மக்கள் எதிர்பார்கின்றனர். அதற்கான காலம் கனிந்து விட்டது.

எல்லாவற்றும் மேலாக, பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும், வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாதது. அதற்காக இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போமாக!

Comments

புதிது பேஸ்புக் பக்கம்