கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்
கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக் காலங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
இதற்கிணங்க, குறித்த மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்குரிய அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் உறுப்புரை 154(உ) வை, திருத்துவதனால் மட்டுமே, மேற்படி மாகாண சபைகளுக்குரிய தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் உறுப்புரை 154(உ) இவ்வாறு கூறுகிறது;
மாகாண சபையொன்று, முன்னரே கலைக்கப்பட்டாலொழிய, அதன் முதலாவது கூட்டத்துக்கென நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, ஐந்து ஆண்டு காலப் பகுதிக்குத் தொடர்ந்திருத்தல் வேண்டும் என்பதுடன், சொல்லப்பட்ட ஐந்து ஆண்டு காலப் பகுதி முடிவடைதல், சபையின் கலைப்பொன்றாகச் செயற்படுதலும் வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவிக்கையில்;
“குறித்த உறுப்புரையினை நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் ஊடாக மட்டும் திருத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்புகிறது. இது மக்களின் உரிமையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினூடாக, இது தொடர்பில் மக்களின் விருப்பம் அறியப்பட வேண்டிய தேவை ஏற்படும். எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தினாலும் இது தீர்மானிக்கப்பட வேண்டும்” என்றார்.
இதேவேளை, மேற்படி வேட்புமனுக் கோரல் தொடர்பான தனது நிலைப்பாட்டினை, தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தது.