ஞானசார தேரருக்கு, தெரியாத பட்டியல்; தேடிப் பார்க்கச் சொல்கிறார், பொறியியலாளர் மன்சூர்

🕔 July 1, 2017

– முன்ஸிப் அஹமட் –

“முஸ்லிம்கள்தொடர்பாக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற ஞானசார தேரர் போன்றவர்கள், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த முஸ்லிம் வீரர்களை நினைத்துப் பார்க்கத் தவறி விட்டார்கள்” என்று, இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல்களில் பொறியியலாளராகப் பணியாற்றியவரும், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்கள் தமது நாட்டை நேசிப்பவர்கள். நாடு பிளவுபடுவதைத் தடுக்கும் பொருட்டு நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தில், தேசத்தைப் பாதுகாப்பதற்காக, ஏராளமான முஸ்லிம்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளில் இணைந்து தமது உயிரைத் தியாகம் செய்தமையினை ஞானசார தேரரும், அவரைப் போன்றவர்களும் நினைத்துப் பார்க்க வேண்டுமெனவும் மன்சூர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, ஞானசார தேரரும் அவருடைய குழுவினரும் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதில் வழங்க வேண்டி தேவை, எனக்கும் உள்ளது.

இஸ்லாத்தைப் பின்பற்றும் நாங்கள், ஏனைய மதத்தை மதிக்கின்றோம். அதேபோல், நாட்டையும் நேசிக்கின்றோம். எமது கடைசி மூச்சுவரை இந்த நாட்டில் அமைதியாக வாழ்வதற்கே நாம் விரும்புகின்றோம். இலங்கையர்கள் எனும் வகையில் 30 வருட கால கொடிய யுத்தத்தால் நாம் பட்ட கஷ்டங்களை, அத்தனை இலகுவில் மறந்து விட முடியாது. அந்த யுத்தமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நமது தேசத்தின் துணிச்சல் மிகுந்த படை வீரர்களின் அர்ப்பணிப்பினால் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுக்கு வந்தது.

இந்தப் போர்க் காலத்தில் பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் ராவண பலய போன்ற அமைப்பினர் எங்கே இருந்தார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். அப்போது அவர்கள் கண்மூடி தவமிருந்தார்களா? யுத்த வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த நமது படை வீரர்களுக்கு ஆதரவாக, தங்கள் பலத்தை, அவர்கள் ஏன் பிரயோகிக்கவில்லை?

நமது நாட்டை துவம்சம் செய்து கொண்டிருந்த கொடிய யுத்தத்தை வெற்றி கொள்வதில், இலங்கை முஸ்லிம்களும் பிரதான பாத்திரம் வகித்திருந்தார்கள் என்கிற உண்மையினை ஞானசார தேரர் போன்றவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களிலிருந்து திருடி விட முடியாத இந்த உண்மைகளை, இங்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நானும், நமது தேசத்தை பிரிவினையிலிருந்து பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த, இலங்கையின் முஸ்லிம் குடிமகன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கைக் கடற்படையில் நான் பணியாற்றியபோது, குறிப்பிடத்தக்க யுத்த செயற்பாடுகளான வடமராட்சி யுத்த நடவடிக்கை, ரிவிரச நடவடிக்கை மற்றும் இரண்டாவது ஈழப்போர் ஆகியவற்றில், பங்குகொண்டிருந்தேன் என்பதை இங்கு குறிப்பிட்டுப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேலும், இலங்கை தேசத்தை பிரிவினையிலிருந்து பாதுகாப்பதற்காக, ஏரானமான முஸ்லிம்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளில் இணைந்து பணியாற்றி, தமது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். எனது அறிவுக்கெட்டியவரையில் அவ்வாறு, தேசத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம்கள் சிலரின் பெயர்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

01) கொமாண்டர் பஹார்
02) கேணல் லபீர்
03) கேணல் பக்கீர்
04) கேணல் முத்தலிப்
05) கேணல் மீடீன்
06) கேணல் யூனூஸ்
07) கேணல் அலிபா
08) கேணல் டானி
09) மேஜர் அசாட்
10) மேஜர் முத்தலிப்
11) மேஜர் அர்மத்
12) மேஜர் மீடீன்
13) பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்டீன்
14) பிரதம பொலிஸ் பரிசோதகர் சத்தார்
15) பொலிஸ் பரிசோதகர் உபைத்துல்லா

எனது கிராமத்தவர்களான
01) பொலிஸ் உத்தியோகத்தர் அமீர்
02) பொலிஸ் உத்தியோகத்தர் ஹசன்
03) பொலிஸ் உத்தியோகத்தர் ரபாய்டீன்
04) பொலிஸ் உத்தியோகத்தர் இஸ்திகார்
05) பொலிஸ் உத்தியோகத்தர் அமீர்

இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டு செல்லும்.

எனவே, இலங்கை முஸ்லிம்களின் தேசபிமானம் தொடர்பிலும், அவர்கள் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் தொடர்பிலும், ஞானசார தேரர் போன்றோர் தேடித் தெரிந்து கொள்ள வேண்டுமேன நான் வேண்டிக்கொள்கிறேன். அப்போதாவது, இலங்கை முஸ்லிம்கள் பற்றிய அவர்களுடைய அபிப்பிராயங்களில் மாற்றங்கள் ஏற்படுமா எனப் பார்க்கலாம்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்