சங்கரி, விக்னேஸ்வரன் இரவில் சந்திப்பு; சூடு பிடிக்கிறது தமிழர் அரசியல்

🕔 July 1, 2017
– பாறுக் ஷிஹான் –

மிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சர், சி.வி. விக்னேஸ்வரனுக்கு மாத்திரம்தான் உண்டு என்று, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கும் இடையில், முதலமைச்சர் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் சந்திப்பு நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ள சூழலில், இந்தச் சந்திப்பு நடைபெற்றமை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சந்திப்பு நட்புரீதியானது. நீங்கள் நினைப்பதுபோன்று அரசியல் பூச்சு இதற்குப் பூசவேண்டாம்” என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தருணத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்க வருமாறு, விக்னேஸ்வரனிடம் ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதலமைச்சருக்கு ஆதரவான அணியைச் சேர்ந்த மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், வீ. ஆனந்தசங்கரியை நள்ளிரவில் சென்று சந்தித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கும் இடையில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பு முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு ஆனந்தசங்கரி கருத்துத் தெரிவிக்கையில்;

“முதலமைச்சரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவரைப் பற்றி விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகைகளில் முதலமைச்சரைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. முதலமைச்சரின் மன ஆறுதலுக்காக அவரை நான் சந்திக்க வந்தேன். நாங்கள் அரசியல் பேசவில்லை” என்றார்.

இதன்போது பத்திரிகையாளர்கள்; “புதுக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றனவே” என்று கேட்டபோது; “முதலமைச்சரிடம், நீங்கள் தலைமை தாங்க வருவதாக இருந்தால் எனது கட்சித் தலைமையை வழங்கத் தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சருக்கு மாத்திரம்தான் உண்டு. எனது கட்சி, தந்தை செல்வா ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற மூத்த பெரிய தலைவர்களால் தொடங்கப்பட்டது. இப்போது அதைப் பற்றி பேசவில்லை” என்றார்.

“இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கூறினார்” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு; “அவர் ஆம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை. மக்களின் விருப்பம் அதுதான் என்பதை அவரிடம் கூறினேன். புதிய கட்சி தொடங்கும் நோக்கம் இல்லை  என்றார்” என, சங்கரி விபரித்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில்; “ஆனந்த சங்கரி எனது 55 வருட கால நண்பர். என்னைப் பற்றி சிலர்  பத்திரிகைகளில் தவறாகக் கூறியதும் அவருக்கு இந்த வயதிலும் வேகம் வந்து விட்டது. தனது நண்பரைப் பற்றி இப்படிக் கூறிவிட்டார்களே என்று என்னை ஆறுதல்படுத்தத்தான் வந்து சந்தித்தார். பல விடயங்கள் பேசினோம். பழைய விடயங்கள் பற்றிம் பேசினோம். நீங்கள் நினைப்பது போன்று, இந்தச் சந்திப்புக்கு அரசியல் பூச்சு பூச வேண்டாம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்