தனியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், ஏழை விவசாயிகளைக் கசக்கிப் பிழியக் கூடாது: ஹக்கீம்

🕔 May 25, 2015

01னியார் சீனி உற்பத்தி நிறுவனங்கள், தமது  இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை  கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று மு.கா. தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சீனிக் கைத்தொழிலை இந்த நாட்டில் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை,  ஏழைவிவசாயிகளின் ஜீவனோபாயமும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப் படல்வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அம்பாரை மாவட்ட கரும்புக்காணி செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கொழும்பிலுள்ள தோட்டக்கைத்தொழில் ராஜாங்க அமைச்சில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“சீனிக் கைத்தொழிலை இந்நாட்டில் முழு அளவில் விருத்தி  செய்வதற்கான சகல  முயற்சிகளும்  நன்கு திட்டமிட்டு, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இயற்திரங்களைப் பயன்படுத்தி  மேற்கொள்தல் வேண்டும். அதற்கான முயற்சிகளை புதிய நல்லாட்சி அரசாங்கம் எல்லாவழிகளிலும் மேற்கொள்ளும்.  ஆனால் அந்த நிலைமை ஏற்படும் வரையில் ஏழைவிவசாயிகளின் ஜீவனோபாயமும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப் படல்வேண்டும்.

தனியார் கம்பனி சீனிக்கூட்டுத்தாபனங்கள் அவர்களின் இலாபத்தை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு, வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளை  கசக்கிப்பிழிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். இவ் விவசாயிகளின் பிரச்சினைகள் – சமூகப் பிரச்சினையாக மாறுவதற்கு முன்பாக,  இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள்  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினையை கூடியவிரைவில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக ஹிங்குரான தனியார் சீனிக்கூட்டுத்தாபனம், லங்கா தனியார் சீனிக்கூட்டுத்தாபனம், அம்பாரை மாவட்ட அரசஅதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்துதல் அவசியமாகும்” என்றார்.

அம்பாறை மாவட்டம் ஆலங்குளம் விவசாயப் பயிர்ச்செய்கையாளர் சங்கம், தீகவாப்பி விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம், நுரைச்சோலை விவசாயிகள் சங்கம் மற்றும் கள்ளியன்பத்தை மோறவிலாறு விவசாயப் பயிர்ச்செய்கை சங்கம் ஆகிவற்றினைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தாம் எதிர்நோக்கும் தொழில் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர்களுக்கு விளக்கமளித்தனர். மேற்படி சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகளின் சுமார் 2500 ஏக்கர் காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விவசாயிகளின் முன்னோர்களால் 1952ம் ஆண்டு காலப்பகுதியில் காடுவெட்டி, அவர்களின் தற்போதைய காணிகள் உருவாக்கப்பட்டன. இந்தக் காணிகளில் அப்போதிருந்து நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆயினும், இந்தக் காணிகள் 1967ம்ஆண்டு காலப்பகுதியில் கல்லோயா அபிவிருத்திக் குழுவினால் கரும்புச்செய்கை மேற்கொள்வதற்கான நிபந்தனைகளின் பேரில் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகள், 30வருடங்களின் பின்பு மீண்டும் ஒப்படைக்கப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயினும்,   கரும்புச்செய்கை மற்றும் சீனி உற்பத்தியினை முறையாக மேற்கொள்ளாத நிலையில், விவசாயிகளின் காணிகளில் நெற்செய்கையைக் கூட மேற்கொள்ள விடாது, அவர்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, ஆலங்குளம் விவசாயிகள் தமது 325 ஏக்கர் காணிகளில் 1990ம் ஆண்டு முதல் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த காணிகள் கரும்புச் செய்கைக்கு பொருத்தமற்றவையென மண்ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த  நிலையில், மேற்படி காணிகளில்  நெற் செய்கை  மேற்கொள்ள கூடாது என்றும், கரும்பு செய்கையில் ஈடுபடுமாறும் கல்லோயாப் பயிர்ச்செய்கை கூட்டுத்தாபனமும், மாவட்ட அரச அதிபரும் கட்டாயப்படுத்துகின்றனரென, மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலங்குளம் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினர்.

இதேவேளை, கரும்புச் செய்கையானது ஒன்றரை வருடங்களைக் கொண்டது.   ஒரு கண்டம் காணியில் கரும்புச் செய்கை மேற்கொள்ளும் விவசாயி ஒருவர்  45 ஆயிரம் ரூபாவுக்கு மேல் நட்டமடைய வேண்டிய நிலை ஏற்படுவதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆனால், இதே காலப்பகுதியில் குறித்த காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் போது,  04 லட்சம் ரூபாய் இலாபமீட்ட முடியுமென விவசாயப் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினர்.

மேற்படி விடயங்களை அவதானத்துடன் கேட்டறிந்து கொண்ட அமைச்சர்களான ரஊப் ஹக்கீம் மற்றும் வேலாயுதம் ஆகியோர்,  செய்கை பண்ணப்படாமல் தடுக்கப்பட்டிருக்கும் காணிகளில் நெற்செய்கை பண்ணுவதற்கான அனுமதியினை ஒருவாரத்தினுள் வழங்குமாறு, அம்பாரை மாவட்ட அரசஅதிபலுக்குப் பணிப்புரை வழங்கியதாக அறிய முடிகிறது.

இதேவேளை, சுமார் 25 வருடங்களின் பின்பு இவ்வாறானதொரு கூட்டம் நடைபெற்றதாக, இங்கு வருகைதந்த விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில், மு.காங்கிரசின் செயலாளரும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மு.காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும்  கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எல்.எம்.பளீல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயற்பாட்டுப் பணிப்பாளர் மஹிலால், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளர்கள், உயரதிகாரிகள், தனியார் கரும்புக்கூட்டுத் தாபன உயரதிகாரிகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் என்று பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

02

 

Comments