தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

🕔 June 28, 2017

‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.

சீனாவிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற பெண்ணொருவர், அங்கிருந்த பெறுமதி வாய்ந்த வளையல் ஒன்றினை பார்ப்பதற்காக எடுத்தபோது, கை நழுவி உடைந்து விட்டது. சரி, உடைந்த வளையலின் விலை என்ன என்று பார்த்த பெண், உண்மையாகவே மயக்கம் போட்டு விழுந்து விட்டார். குறித்த வளையல் 03 லட்சம் யுவான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. (இலங்கைப் பெறுமதியில் கிட்டத்தட்ட 68 லட்சம் ரூபாய்).

சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள நகைக் கடையில்தான் சம்பவம் நடந்தது. அங்கு, பச்சை மாணிக்கக் கல்லினால் உருவாக்கப்பட்ட காப்புகள் இருந்துள்ளன. அவற்றில் ஒன்றினை அந்தப் பெண் – பார்ப்பதற்காக எடுத்தபோதுதான், கை தவறி கீழே விழுந்து உடைந்திருக்கிறது. உடைந்த வளையலின் விலை என்ன என்று அந்தப் பெண் பார்த்த போதுதான் 03 லட்சம் யுவான் என குறிப்பிடப்பட்டிருந்தது.

விலையைப் பார்த்த பெண் அச்சமடைந்துள்ளார், அவரின் உதடுகள் திடீரென வெளிறியதாக சம்பவத்தைக் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்த முயற்சித்த வேளையில், திடீரென அவர் மயக்கமடைந்து விட்டார்.

உடனடியாக அந்தப் பெண்ணை அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்திருக்கின்றனர். சிகிச்சையின் பின்னர், பெண் குணமடைந்து விட்டார்.

இந்த நிலையில், குறித்த பெண்ணின் பொருளாதார நிலைப்படி அவரிடமிருந்து பணத்தை கட்டம் கட்டமாக பெற்றுக் கொள்வதற்கு கடை உரிமையாளர் பேசியிருக்கின்றார். ஆயினும், அந்த வளையலுக்கு 70 ஆயிரம் யுவான்களை (இலங்கை பெறுமதியில் 16 லட்சம் ரூபாய்) கொடுப்பதற்கு, குறித்த பெண் தரப்பு இணங்கியுள்ளது. பிரச்சினை பொலிஸுக்குச் செல்லவில்லை.

எவ்வாறாயினும், உடைந்த வளையல் – கடைக்காரர் சொல்லுமளவு பெறுமதியானது இல்லை என்று, இணையத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடைகளுக்குச் செல்லும் போது, கண்ட பொருட்களையெல்லாம், கையில் எடுத்துப் பார்க்கும் பெண்களுக்கு, இந்தச் செய்தி நல்ல பாடமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்