யானை தாக்கி குடும்பஸ்தர் பலி; பொத்துவிலில் சம்பவம்
– கலீபா –
குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டச்சென்ற விவசாயி, அதே யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பொத்துவில் – 27, ரசாக் மௌலானா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை முகைதீன் பாவா இப்றாஹீம் (வயது 42) எனும் விவசாயியே இவ்வாறு, உயிரிழந்தார்.
ஊர்ப்பகுதிக்குள் நுழைந்த காட்டுயானையை விரட்டச் சென்ற இவரை, அதே யானை, அவரின் வீட்டுக்கு அருகாமையில் வைத்துத் தாக்கியுள்ளது.
இதனையடுத்து, தாக்குதலுக்கான நபரை ஆபத்தானநிலையில் அயலவர்கள் பொத்துவில் அதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொத்துவில் பிரதேச குடியிருப்பு பகுதிகளுக்குள், காட்டு யானைகள் அடிக்கடி நுழைகின்றன.
இதனால், மக்கள் தினமும் உயிர் அச்சுறுத்தலுடன் தமது நாட்களைக் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.