ஞானசார தேரர் பிணையில் விடுதலை
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை, கோட்டே நீதவான் நீதிமன்றில் சரணடைந்த ஞானசார தேரர், முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேரரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட கோட்டே நீதவான் லங்கா ஜயரத்ன, அவர் தொடர்பான வழக்கினை ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 15 ஆம் திகதி, ஞானசார தேரருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், அவர் இன்று புதன்கிழமை காலை, நீதிமன்றில் சரணடைந்தார்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி, கொம்பனித் தெருவில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பலாத்காரமாக நுழைந்ததோடு, அங்கிருந்தவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தினர் எனும் குற்றச்சாட்டின் பேரில், ஞானசார தேரருக்கும் மேலும் 07 பேருக்கும் எதிராக 08 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகத் தவறியமையினை அடுத்து, அவருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதேவேளை, மதங்களை இழிவுபடுத்திய குற்றச்சாட்டின் கீழும், தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.