இலங்கை முஸ்லிம்கள் மீதான வன்முறை; அமெரிக்க தூதுவர் கேசாப் கண்டனம்
🕔 June 21, 2017
– எம்.வை. அமீர் –
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கண்டிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
காலகாலமாக, சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடனும் அரசுடனும் இணைந்து வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கண்டிப்பதோடு, சமூகங்களின் ஒற்றுமைக்காக புனித நோன்பு தினத்தில் பிராத்திப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்; “இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும். இலங்கையில் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் கடந்தகாலங்களில் அமெரிக்கா பல்வேறு வகையில் பொருளாதார மற்றும் ராஜதந்திர முறைகளில் உதவிவருகிறது. எதிர்க்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் அதிக கரிசனை செலுத்தும்” என்றார்.