பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை

🕔 June 18, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்குமிடையில் இருந்து வந்த ‘பனிப் போர்’ உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி இருவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும், ஒருவர் மீது மற்றவர் கண்ணுக்குத் தெரியாத கத்திகளை பரஸ்பரம் அவ்வப்போது சுழற்றுவது வழமையாகும்.

இந்த நிலையில், எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் இப்தார் நிகழ்வொன்றினை அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வுக்கு அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில், கௌரவ அதிதிகளாக பிரதியமைச்சர்கள் பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயினும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீருடைய பெயர் அந்த அழைப்பிதழில் இடம்பெறவில்லை. இதனால், நசீர் கடுமையான ஆத்திரத்தில் உள்ளதோடு, தவத்தின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என்றும், தனது ஆதரவாளர்களையும் கலந்து கொள்ள விடுவதில்லை எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

நசீருடைய பெயரை, தவம் தனது இப்தார் நிகழ்வு அழைப்பிதழில் ஏன் குறிப்பிடவில்லை என விசாரித்தபோது, அதற்கான பதிலும் கிடைத்தது.

அட்டாளைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது. மாகாண அமைச்சர் நசீருடைய தலைமையில்தான் இந்த நிகழ்வு நடைபெற்றது. மேற்படி இப்தார் நிகழ்வுக்கென அச்சிடப்பட்ட அழைப்பிதழில் மாகாணசபை உறுப்பினர் தவத்தின் பெயர் இடம்பெறவில்லை. இருந்தாலும், குறித்த இப்தார் நிகழ்வில் தவம் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், பழிக்குப் பழி தீர்ப்பதற்காகவே, தான் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வுக்கான அழைப்பிதழில், நசீரின் பெயரை தவம் குறிப்பிடவில்லை என அறிய முடிகிறது.

தவத்தின் இப்தார் நிகழ்வுக்கான அழைப்பிதழில் நசீருடைய பெயரை குறிப்பிடாமல், மாகாண அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைச் சுட்டிக் காட்டி, தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய நசீர்; கிழக்கு மாகாணத்தில் நான் மட்டும்தானே முஸ்லிம் அமைச்சராக உள்ளேன். அதை நேரடியாக எனது பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு அவருக்கென்ன பிரச்சினை எனக் கூறியுள்ளார்.

இந்தக் குத்து வெட்டுகளின் பின்னணியில், தவத்தின் இப்தார் நிகழ்வுக்கு செல்வதில்லை என, நசீர் தீர்மானித்துள்ளார் என்பதுதான் தற்போதைய செய்தியாகும்.

Comments