சில நூறு யூரோக்களுக்காக, 58 உயிர்கள் பலி; லண்டன் தீ விபத்தின் காரணம் கண்டு பிடிப்பு
கட்டட ஒப்பந்தகாரர்கள், சில கட்டட நிர்மாணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறைந்த விலையில் குறித்த ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இதன் காரணாக, சிபாரிசு செய்யப்பட்ட தரமான பொருட்களைப் பயன்படுத்தி குறித்த கட்டடத்தை அவர்களால் நிர்மாணிக்க முடிவதில்லை. அப்படி நிர்மாணிப்பது அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே, தரம் குறைந்த பொருட்களை குறைந்த விலைக்குப் பெற்று, அவற்றினை கட்டட நிர்மாணத்துக்கு பயன்படுத்த வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படும். இது, அந்தக் கட்டடத்தின் பாதுகாப்பினை கேள்விக்குள்ளாக்கும்.
சரி விடயத்துக்கு வருவோம்.
அண்மையில் லண்டன் அடுக்கு மாடி குறியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கும், இப்படியானதொரு செயற்பாடுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேற்படி தீ விபத்து ஏற்படுவதற்கு தரக்குறைவான தீயணைப்பு அலார சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தமைதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரென்ஃபெல் டவர் எனும் குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால், 24 மாடிக்கட்டடம் முழுவதும் எரிந்தது.
இந்நிலையில் கட்டடத்தில் தரம் குறைந்த தீயணைப்பு அலாரம் பொருத்தப்பட்டிருந்தமை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அலாரம் விலைக்குறைவான பிளாஸ்டிக்கில் செய்யப்பட்டது.
தரமான அலாரத்தின் விலை 06 ஆயிரம் யூரோக்களாகும். இந்த நிலையில் சில நூறு யூரோக்களை மிச்சப்படுத்துவதற்காகவே, தரக்குறைவான சாதனத்தை ஒப்பந்தகாரர் கட்டடத்தில் பொருத்தி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
தொழில்போட்டி காரணமாக இந்த ஒப்பந்தகாரர் குறைந்த விலைக்கு கட்டட ஒப்பந்தத்தை எடுத்ததும், அந்த இழப்பை சீர்செய்ய, விலை குறைந்த பொருட்களை கட்டடத்தில் பொருத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி தீ விபத்தில் 58 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.