அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

🕔 June 13, 2017

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.

மேற்படி இருவரும் அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹெகலியவின் தொலைபேசிக்காக 02 லட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபாவினை கட்டணமாகச் செலுத்தியதன் மூலம், மேற்படி நஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளளனர்.

அமைச்சர் ஒருவரின் தொலைபேசி கட்டணமாக 40 ஆயிரம் ரூபாவினை அரசு வழங்குகின்றபோதிலும், அதற்கு அதிகமான தொகையினை அரச பணத்திலிருந்து அமைச்சர் மோசடியாகக் செலுத்தியுள்ளார்.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக, 02 லட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபாவினை முன்னாள் அமைச்சர் தனது தொலைபேசிக்கான கட்டணமாகச் செலுத்தியதாகவும், இந்த மோசடிக்கு, அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் துணை போனதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர, அரசுக்கு 75 மில்லியன் ரூபாவினை நஷ்டம் ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் மேலம் 13 வழக்குகள், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்டவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments