ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள்

🕔 June 12, 2017

– நவாஸ் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, மு.கா. தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும், மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தம்மைத் தாமே புறமொதிக்கிக் கொண்டமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, அனைத்து முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், மேற்படி நிகழ்வில் மு.காங்கிரசைச் சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியும் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேள்வியெழுப்பப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக, முஸ்லிம்களின் கட்சி எனக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸினர், இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. இந்த நிலையில், ஊடகவியலாளர்களின் மேற்படி நிகழ்வுக்குச் சென்றால், இது குறித்து அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது என்பதனாலேயே, குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல்  அவர்கள் தலைமறைவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மேற்படி இப்தார் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் இறுதியில், மேற்படி அரசியல் தலைவர்களிடம் சமகால அரசியல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளைத் தொடுத்தனர். அந்தக் கேள்விகளுக்கு அவர்களும் பொறுமையுடன் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம்களின் கட்சி எனக் கூறிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்ந்தோர், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகியமை குறித்து, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட புத்தி ஜீவிகள் பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் மிகப் பலம்வாய்ந்த ஓர் ஊடக அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட இந்த அரசியல்வாதிகள் பரிதாபத்துக்குரியவர்கள் எனவும், அங்கு  வருகை தந்தவர்கள் விமர்சித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்