அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது

🕔 June 10, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனையில் நிர்மாணித்துள்ள புதிய வீட்டுக்கான பாதையொன்று, அரசாங்கத்தின் 60 லட்சம் ரூபா நிதியில், காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 450 மீற்றர் தூரம் கொண்டதாக, இந்த வீதி அமைக்கப்படவுள்ளது.

குறித்த பாதையில், அமைச்சர் நசீருடைய வீட்டைத் தவிர, வேறு வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் 1000 கிலோமீற்றர் பாதைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபா நிதியினைக் கொண்டு, அமைச்சர் நசீரின் வீட்டுக்கான மேற்படி பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் வீதியொன்றினை அபிவிருத்தி செய்யும் போது, அதிகளவான மக்கள் நன்மையடைய வேண்டுமென்பது, நிபந்தனையாக உள்ளது. அவ்வாறாயின், அமைச்சர் நசீருடைய வீடு மட்டுமே அமைந்துள்ள வீதியினை எவ்வாறு மிகப் பெரும் தொகையில் காபட் வீதியாக அமைக்க முடியும் என்று, பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

குறித்த புதிய வீட்டுக்கு அமைச்சர் நசீர் கூட, இன்னும் குடிவரவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அட்டாளைச்சேனையில் ஊர்க்கரை வாய்க்கால் வீதி, சரீப் ஹாஜியார் வீதி மற்றும் மத்திய வீதி என, பல வீதிகள் – மிக நீண்ட காலமாக சேதமடைந்து, அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படும் நிலையில், அந்த வீதிகளை மேற்படி 60 லட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தி செய்வதே, சரியான தீர்மானமாக அமையும். மேற்சொன்ன வீதிகளில் பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசிப்பதோடு, தினமும் ஆயிரக்கணக்கானோர் அந்த வீதிகளைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

ஆனால், ஒரேயொரு வீடு அமைந்திருக்கும் வீதியொன்றினை, அதுவும் அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதி என்பதற்காக அரசாங்கத்தின் 60 லட்சம் ரூபாய் நிதியில் அபிவிருத்தி செய்வதென்பது, மிகப் பெரும் மோசடியாகும் என்றும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் மேற்படி பணத்தில் அமைச்சரின் வீட்டு வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் முன்மொழிந்து, உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சரின் வீட்டுக்கான வீதியினை அபிவிருத்தி செய்யும் போது, குறித்த வீதியை அகலப்படுத்துவதற்காக, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் சுற்று மதிலை உடைக்கவுள்ளதாகவும், மைதானத்துக்குச் சொந்தமான 03 அடி நிலத்தினை அபகரிக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தினை 400 மீற்றர் மைதானமாக அமைக்கும் பொருட்டு, மைதானத்தின் அருகிலிருந்த தனியார் காணியினை, பெருமளவு  அரச நிதியில் கொள்வனவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, அமைச்சரின் வீட்டுக்கான வீதியானது, அரச நிதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு, பொது விளையாட்டு மைதானத்தின் நிலமும் அதற்காக, அபகரிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

Comments