முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

🕔 June 10, 2017

– எம்.வை. அமீர்-

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“முஸ்லிம் சமூகம் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த அரசின் காலத்தைப் போன்று அல்லது அதைவிட மோசமாக  முஸ்லிம் சமூகம் இப்போது பாதிக்கப்பட்டு வருகின்றது. தினமும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான செயற்பாடுகள் நடந்த வண்ணமே உள்ளன.

இந்த அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி ஒன்றின் தலைவன் என்ற வகையிலும் இந்த ஆட்சியை கொண்டுவருவதில் முழுமூச்சாக பங்களித்தவன் என்ற வகையிலும் அரசாங்கத்தின் தலைமைகளுக்கு இந்த விடயங்களை இடித்துரைத்துள்ளேன்.

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் முஸ்லிம் சமூகத்தின்  வேதனைகளையும் பாதிப்புகளையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் எடுத்துரைத்துள்ளோம். இவற்றை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளோம். எனினும் நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் எங்களை சீண்டும் வகையில் இனவாதிகள் தமது மிலேச்சதனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் இயக்கங்கள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அனைவரும் கட்சி, அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றுக்கப்பால்  ஒருமித்த குரலுடனும் ஒருமித்த கருத்துடனும் ஒன்றுபட்டுள்ளனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எங்கள் முயற்சிக்கு பக்க பலமாக நிற்கின்றது. ஜம்மியாவின் வழிகாட்டலில் அவர்கள் எந்த முடிவை மேற்கொண்டாலும் நான் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள மக்கள் காங்கிரஸ் அதற்கு கட்டுப்படும். முஸ்லிம் சமூகத்துக்காக, அந்த சமூகத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையும் நாங்கள் செய்வதற்கு தயாராக உள்ளோம்.

நமது நாட்டில் இனவாதிகளின் இந்த கொடுர செயற்பாடுகள் இப்படி இருக்க சியோனிசவாதிகள் அரபு நாடுகளுக்குள் ஊடுருவி அந்த நாடுகளின் பலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமுகத்துக்கு கவலை தந்துள்ளது. அரபு நாடுகள் மீண்டும் ஒற்றுமைப்பட வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். அதே போல நமது பிரச்சினைகள் தீரவேண்டும் என இந்த புனித ரம்ழானில் பிராத்தனைகளில் ஈடுபடுவோம்” என்றார்.

இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் மக்கள் காங்கிரசின் பிரதி தவிசாளருமான கலாநிதி இஸ்மாயிலும் உரையாற்றினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்