மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

🕔 June 4, 2017

லங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேசஷுக்கான தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே. குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர் என்று கூறப்படுகிறது.

பிரான்சுக்கான தூதுவராகப் பணியாற்றும் திலக் ரணவிராஜா அமெரிக்க மற்றம் இலங்கைக் குடியுரிமைகளைக் கொண்டுள்ளவர் என அறியப்படுகிறது.

லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கொன்சூல் ஜெனரலாகப் பணியாற்றும், சுவர்ணா குணரத்ன இலங்கைக் குடியுரிமையுடன் கனேடிய குடியுரிமையையும் கொண்டவர் என்று தெரியவந்துள்ளது.

அதேவேளை, பிரான்சுக்கான புதிய தூதுவராக பிரேரிக்கப்பட்டுள்ள, புத்தி அதாவுடவும் அமெரிக்க குடியுரிமையினைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

ராஜதந்திரப் பதவிகளில் ஏனைய தரங்களில் உள்ள அதிகாரிகளிலும் பலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் மின்ஸ்டர் கவுன்சிலராக உள்ள சோனாலி சமரசிங்க அமெரிக்க குடியுரிமை கொண்டுள்ளவராவார்.

பிரித்தானிய குடியுரிமை கொண்ட மனோஜ் வர்ணபால லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், கவுன்சிலராக பணியாற்றுகிறார்.

லண்டனில் உள்ள தூதரகத்தில், மூன்றாவது செயலராகப் பணியாற்றும், எஸ்.என்.குரே, பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டுள்ளவராவார்.

அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றவரான பாலசூரிய, ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டாவது செயலராக பணியாற்றுகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments