அப்துர் ரகுமானின் சொத்தாக மாறுகிறது, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

🕔 June 3, 2017

– முஹம்மத்  இஹ்லாஸ் (ஏறாவூர்) –

லங்கை முஸ்லிகளுக்கு சிறந்த அரசியல் தலைமையை கொடுக்கலாம் என நம்பப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  தனது செயற்பாடுகளைச் சரிவரச் செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியினை ஆராயும்போது, வழமையில் முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் போல, அந்த முன்னணியும் பிரச்சினைகளை பேசிக் கொண்டே இருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.


பல தூய நோக்கங்களும் பலரது தன்னலமற்ற உழைப்பும் கட்சியின் தலைவர் பதவியிலிருப்பவருக்கு, பதவியெடுக்க பயன்படுத்தப்படுவது போலவே தெரிகிறது.

இந்நாட்டு முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்தபோது, அரசியலில் முஸ்லிம்களுக்காகப் போராடுவதற்கு, மாற்று அமைப்பொன்று இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் NFGGயின் பிரச்சாரங்கள் மக்களுக்கு நம்பிக்கை தரும் ஒரு ஒளிக் கீற்றாக தெரிந்தது. ஆனால் இன்றைய நிலையில் NFGG யும் வழமையான தேர்தல் காலக் கட்சியாகவே செயற்படுகிறது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மஹிந்த காலத்தில் இருந்ததை விட, மோசமான ஒரு சூழலே இன்றைய நிலமையில் உள்ளது.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற கட்சிகளின் தலைவர்கள், நாட்டில்  முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களைக் கண்டித்து, ஆளாளுக்கு – ஊடக அறிக்கையில் கவலைகளை சொல்லி விட்டுச் செல்கின்றனர். ஆனால் பிரச்சினைகள் முடிந்த பாடில்லை. சிக்கல்களை ஏற்படுத்தியவர்களிடம் பேசாது சிக்கலுகக்குள்ளான சதிகளுக்குள்அகப்பட்ட மக்களிடம், படம் காட்டுகிற ஒரு நிலையே காணப்படுகிறது. அதையே NFGG யும் செய்வது கவலையளிக்கிறது.

இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம்களின் வாக்குகளை கொண்டு சேர்த்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இன்றைய நிலையில் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களுக்கு எதிராக எத்தனை முறை ஜனாதிபதியையும் பிரதமரைச் சந்தித்து இருப்பீர்கள்? அதைச் செய்ய தங்களிடம் போதிய அதிகாரம் இல்லை என்று சொல்வீர்கள். அப்படி என்றால் எந்த அரசியல் இயலுமையும் இல்லாத நீங்கள் எப்படி இந்த அரசாங்கத்தில் எமக்காக முன்நிற்க முடியும்.

இன்று முஸ்லிம்களுக்காக அரசியல் செய்ய வருபவர்கள் முழுநேர அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும். அந்தளவிற்கு நமது சமூகம் பல பக்க பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. அதைவிட்டு தங்களுக்கு ஓய்வு கிடைக்கிற போது, முஸ்லிம் அரசியலைப் பற்றி யோசிப்பதும் பேசுவதும் ஊடகஅறிக்கைகள் விடுவதுமாக இருப்பதனால் எதையும் பேரினவாத அரசிடமிருந்து பெறமுடியாது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, BCAS Campus உரிமையாளர் பொறியியலாளர் அப்துர் றகுமானுக்கு சொந்தமானது. அவர்ஒரு பெரிய தொழிலதிபர். பல நாடுகளில் பல தொழில்கள் செய்பவர். இவை எல்லாவற்றையும் முடித்து நேரம் கிடைக்கும் போது முஸ்லிம் அரசியல் பற்றி யோசிப்பவர்.

ஆக, ஒரு கட்சியின் தலைவரே சாதரண தொண்டனின் நிலையிலிருந்து எதைச் சாதிக்க முடியும்?  NFGG யின் பலஆயிரம் தொண்டர்களுடைய உழைப்பும் தியாகமும் பொறியியலாளர் அப்துர் றகுமான்  பதவி எடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையானது, பலரைச் சோர்வடையச் செய்கிறது.

மேலும் அப்துர் றகுமான் நிறைவேற்றுநராகவுள்ள BCAS Campus நிறுவனம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற ஒழுக்க மற்றும் இஸ்லாமிய கலாசார நடைமுறைகளுக்கு எதிரான செயற்பாடுகள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் குறைகளாகப் பார்க்கப்படுகிறது. காரணம் BCAS  உரிமையாளரால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  தலைமை தாங்கப்படுகிறது என்பதனாலாகும். நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியும் அப்துர் றகுமானின் ஒரு சொத்தாகவே பார்க்கப்படுகிறது.

அத்துடன் காசு உள்ளவர்கள்தான் முஸ்லிம் அரசியலைத் தலைமை தாங்க வேண்டும் என்றால், இப்போது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கிற கட்சிகள் போதுமானதாகும். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைக் கலைத்து விடலாமே?

 தற்போது NFGG ல் அடுத்த கட்டத்தில் இருப்பவர்களிடம் தலைமைப் பொறுப்பினைக் கொடுத்து விட்டு, அப்துர் றகுமான் நிதிப் பங்களிப்புகளை வழங்கலாம். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அப்துர் றகுமான் –  நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாகாண சபைஉறுப்பினராகவோ தெரிவு செய்யப்படுவதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகள் தீரப்போவதில்லை.

அரசியலில் ஈடுபடுகின்றவர் பணக்காரராக இருந்தால், அவர் மக்கள் பணத்தை களவு எடுக்க மாட்டார் என்று நம்பப்படுவது மட்டும் தலைமைத்துவத்தின் முழுத் தகுதி ஆகிவிடாது. அது ஒரு தகுதி மட்டும்தான். முழுநேரமும் முஸ்லிம் அரசியல் பற்றிச் சிந்திக்கக் கூடிய, மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு வழங்கும் சம்பளத்தில் வாழத் தெரிந்த ஒருவரே மக்களுக்கு தேவையானவராவார்.

எனவே அப்துர் றகுமான் முழுநேர அரசியல்வாதியாக மாற வேண்டும் அல்லது அப்படி இந்த சமூகத்துக்காக வேலை செய்யக்கூடிய ஒருவரிடம் NFGG யின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறில்லாத நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் முஸ்லிம் சமூகம் நலவுகள் எதையும் அறுவடை செய்யப் போவதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்