அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

🕔 May 30, 2017

– எம்.ஐ.முபாறக் –

மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபாலவால் நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனக பண்டாரவின் மகன் மத்திய மாகாண அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

மைத்திரி அணியினர் முயற்சி செய்து ஜனக பண்டாரவின் சகோதரரின் மகனையே வெற்றிடமான அந்த அமைச்சுப் பதவிக்கு நியமித்துவிட்டனர்.இதனைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சபையிலும் குழப்பம்.

மே தின நிகழ்வை அடுத்து வட மத்திய மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மஹிந்தவின் விசுவாசியான கே.எச். நந்தசேனவை மைத்திரி அப்பதவியில் இருந்து நீக்கினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எஸ்.எம். சந்திரசேன அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து எஸ்.எம். சந்திரசேனவை முதலமைச்சராக நியமிக்குமாறு கோரி மஹிந்த உறுப்பினர்கள் 17பேர் கையெழுத்திட்டு ஆளுநரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

அந்த மகஜர் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த 17பேரில் ஒருவரான சுசில் குணரட்ன மறுநாள் மைத்திரி பக்கம் பல்டி அடித்துவிட்டார்.பல்டியடித்த அவருக்கு எஸ்.எம். சந்திரசேன வகித்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

மேலும் அடுத்தடுத்து இரண்டு பேர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டனர். இவர்களை வளைத்துப் போடுவதற்கு மைத்திரி தரப்பு பேரம் பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது.

முதலைமைச்சர் பதவியைக் கைப்பற்றுதல் என்ற முடிவை அந்த 17பேரும் எடுத்ததும் அவர்கள் மஹிந்தவைச் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டைக் கூறினர். அந்தச் சந்திப்பில் 16 பேரே கலந்துகொண்டனர். மைத்திரியிடம் மத்திய அரசின் அதிகாரம் இருக்கும்போது இது சாத்தியமற்றது என்று மஹிந்த அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

அப்போது அவர்களுள் இருவர் ”சேர் மைத்திரி பக்கம் மாறினால் அமைச்சுப் பதவியும் இரண்டு கோடி ரூபா பணமும் தருவதாக மைத்திரி தரப்பு எங்களிடம் கூறியுள்ளது. நாங்கள் போகமாட்டோம்” என்றனர்.

அப்போது 17ஆவது நபர் உள்ளே நுழைந்தார். ஏன் தாமதம் என்று வினவப்பட்டது. மைத்திரி பக்கம் பல்டியடித்தால் இரண்டு கோடி ரூபா பணமும் அமைச்சுப் பதவியும் தருவதாக மைத்திரியின் ஆட்கள் அவரைக் கூப்பிட்டுப் பேசியதாகவும் அதனால்தான் தாமதம் என்றும் கூறினார்.

”நான் பல்டியடிக்கமாட்டேன். ஆனால், யாராவது அவ்வாறு செய்வதற்கு நினைத்திருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தாருங்கள். எனக்கு பணப் பிரச்சினை அதிகம் உண்டு” என்று அந்த நபர் மஹிந்தவிடம் கூறினார்.

இதைக் கேட்டு மஹிந்த சற்று ஆடியே போனார். இருந்தும், மறுநாள் அவர் உட்பட மூவர் மைத்திரி பக்கம் தாவி அமைச்சுப் பதவியைப் பெற்றுவிட்டனர்.

அமைச்சுப் பதவி மாத்திரமன்றி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறு ஏதோவெல்லாம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்