பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

🕔 May 30, 2017

– ஆசிரியர் கருத்து –

ள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது.

ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை.

உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தினால், அதிக நன்மை கிடைக்கும் என்று, சிலர் நினைத்துக் கொண்டிருக்கவும் கூடும்.

எவ்வாறாயினும், ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் இந்தக் கலாசாரம் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி விட்டுள்ளது.

இந்த செயற்பாடானது மாற்று மதத்தவர்களுக்கு கோபத்தை உண்டு பண்டும் அதேவேளை, முஸ்லிம்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தும் விடயமாகவும் மாறிப் போயுள்ளது.

பள்ளிவாசல்களின் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு, பெரும் சத்தத்தில் ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது சில சமயங்களில் கடுமையான சங்கடங்களை ஏற்படுத்துகிறது.

ஆனால், இதையெல்லாம் பள்ளிவாசல் நிருவாகத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.

குர்ஆன் ஓதப்படும் போது, அதனை செவி மடுக்காமல் வேறு காரியங்களில் ஈடுபடுவது பாவமான காரியமாகும். ஆனால், பள்ளிவாசல்களிலுள்ள ஒலிபெருக்கிகளில் அல்குர்ஆன் ஓதப்படும் போது, வெளியிலுள்ளவர்கள் யாரும் அதனை நின்று கேட்டுக் கொண்டிருப்பதில்லை. அப்படியாயின் இந்தப் பாவம் யாரைப் போய்ச் சேரும்?

இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், நிந்தவூர் உலமா சபையினர் ஒரு தீர்மானத்தை எடுத்தனர். அதாவது, தமது பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதை வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் ஒலிக்க விடுவதில்லை என்பதுதான் அந்தத் தீர்மானமாகும். இது – பாராட்டுக்குரிய முடிவாகும்.

நிந்தவூரில் இந்த தீர்மானம் சில நாட்கள் அமுல்படுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. ஆயினும், சிலரின் அழுத்தம் காரணமாக, தொழுகை நடத்துவதையும், கிராஅத் ஓதுவதையும் மீண்டும் பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ஒலிக்க விடுவதாகக் கூறப்படுகிறது.

ஒலிபெருக்கி என்பதன் தேவை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியினுள் தொழுகின்றவர்களுக்கு, தொழுகை நடத்துகின்றவரின் குரல் கேட்காமலிருந்தால்தான் அங்கு ஒலிபெருக்கி தேவை. அப்போது, பள்ளிவாசலின் உள்ளே இருக்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் போதுமானதாகும்.

வீட்டிலும், வீதிகளிலும் நின்று கொண்டிருப்பவர்கள் தொழுகை சத்தத்தை ஏன் கேட்க வேண்டும்? அதனால் என்னதான் நன்மை? என்பதை கொஞ்சம் பகுத்தறிந்தால், பிரச்சினைக்கு முடிவு கிடைத்து விடும்.

மேலும், பள்ளிவாசல்களில் மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதை வெளியிலுள்ள ஒலிபெருக்கியில் ஒலிக்க விட வேண்டிய தேவை கிடையாது. மார்க்க உபதேசம் கேட்க வேண்டும் என விரும்புகின்றவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து அதைக் கேட்க வேண்டும். அதுதான் நன்மையான காரியமாகும்.

இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் கச்சை கட்டிக் கொண்டிருப்பதற்கு, முஸ்லிம்கள் சிலரின் பிடிவாதமான மற்றும் வீராய்ப்புத்தனமாக சமய செயற்பாடுகளும் காரணமாகும்.

நிந்தவூர் உலமா சபையினர் – ஒலிபெருக்கி தொடர்பான தமது தீர்மானத்தில் உறுதியாக இருக்க வேண்டும். பின்னடிக்கக் கூடாது என்பதை ஒரு கோரிக்கையாக இங்கு முன்வைக்கிறோம். நிந்தவூர் உலமா சபையினரின் செயற்பாட்டினை ஏனைய ஊர்களிலுள்ள பள்ளிவாசல்களும் பின்பற்ற வேண்டும்.

நல்ல விடயத்தை பின்பற்றுவதற்கு பின்னடிக்கத் தேவையில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்