ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம்

🕔 May 20, 2017
– பிறவ்ஸ் –

டந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொலநறுவை மாவட்டம் – சின்னவில்பட்டி பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றியுள்ள நிலையில், இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்குள்ள முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேசியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.

சின்னவில்பட்டி முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாகக்கூறி பொதுபல சேனா, சிங்கள ராவய மற்றும் சிங்ஹலே அமைப்பைச் சேர்ந்த தேரர்கள், அண்மையில் ஞானசார தேரர் தலைமையில் சென்று அங்குள்ள முஸ்லிம்களை வெளியேறுமாறு எச்சரித்துவிட்டு, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் பிரசாரங்களையும் பேசிவிட்டு சென்றனர். அத்துடன் பண்ணைகளில் காணப்பட்ட தொழுவங்களையும் கொட்டில்களையும் உடைத்துவிட்டுச் சென்றிருந்தனர்.

இதனால், சின்னவில்பட்டி பிரதேசத்தில் பதற்றநிலை தோன்றியுள்ள நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை பொலன்னறுவைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு, கதுருவெல ஜயந்தி பிரிவேன விகாராதிபதி தம்மபால தேரரை சந்தித்து கலந்துரையாடினார். இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறுகின்ற இவ்வாறான இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து தேரரிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த தம்மபாலு தேரர், வெளிப் பிரதேசங்களிலிருந்து வந்த சில பௌத்த தேரர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இங்குள்ள சிங்கள மக்கள் சுமூகமான முறையில் முஸ்லிம்களுடன் உறவுகளைப் பேணி வருவதாகவும் தெரிவித்தார். எங்களது விகாரையை சூழவுள்ள முஸ்லிம்கள் எங்களுடன் அந்நியோன்னியமாக பழகுகின்றனர். இனிவரும் காலங்களில் இவ்வாறான இனவாத கருத்துகளை பரப்புவோர் இங்கு வருவதை அனுமதிக்கமாட்டோம் என்றும், இங்குள்ள முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்பின்னர், சின்னவில்பட்டி மக்களின் நியாயங்களை கேட்டறியும் வகையில் விசேட சந்திப்பொன்று தம்பாலை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இதன்போது மக்கள் தங்களுடைய நியாயங்களை அமைச்சரிடம் முன்வைத்து பேசியதுடன், பல நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த தங்களுடைய காணி உறுதிப்பத்திரங்களை அமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.

சின்னவில்பட்டி முஸ்லிம்கள் 2000 ஏக்கர் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பதாக்கூறி, அங்கு பௌத்த குடியேற்றங்களை நிறுவுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே இதைப் பார்ப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். அத்துடன் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் ஞானசார தேரரின் இனவாத நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாதெனவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்;

“கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இவ்வாறான இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இப்படியானதொரு இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம்.

அத்துடன், விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கும் அமைச்சுகளுடனும் பேசி, இது முஸ்லிம்கள் பரம்பரையாக இருந்துவரும் விவாசாயக்காணி என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தி இதற்கான நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருவேன்” என்று மக்களிடம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் சுதந்திரக் கட்சி பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் பசீர் அஹமட், வடமத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். அன்ஸார், லங்காபுர பிரதேச சபை உறுப்பினர்களான யூ.எல்.ஏ. றஹீம், எம். நாஸர், தம்பாலை பெரியபள்ளி நிர்வாகிகள், கிராம சேவகர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்