மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு

– பழுலுல்லாஹ் பர்ஹான் –
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஈரோஸ் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைமை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உடனிருந்தார்.
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுவை முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தாக்கல் செய்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவை அதன் தலைமை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி சாஹீர் மௌலானா தலைமையில் வந்த வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்புமனுவை, அதன் நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அழகையா இராசமாணிக்கம் தலைமையில் வேட்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா ஆகியோர் வருகை தந்து தாக்கல் செய்தனர்.
மேற்படி பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக் குழுக்களும் தங்களது வேட்புமனுக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


