தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

🕔 May 16, 2017

– எஸ்.எம். சப்றி –

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் களத்துக்குச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலுள்ள மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய  காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும் செல்வ நகர் பகுதியில்   பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் ஊடகப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வெளியிடங்களிலிருந்து வந்த காடையர்களே இவ்வாறு பதற்ற நிலையினை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பௌத்த விகாரைப்பகுதியில் இருந்து முஸ்லிம் பிரதேசத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் ஊடகப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி அப்பகுதி மக்களால் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பின் கவனத்திற்கு உடனடியாக கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, திருகோணமலைக்கு இன்று செவ்வாய்கிழமை வந்திருந்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தனவை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் நேரடியாக சந்தித்து, விடயத்தை அவரின் நேரடிக்கவனத்திற்கு கொண்டு வந்தார்.

உடனடியாக, அமைச்சர் ருவன் விஜயவர்த்தன அங்கிருந்து மாவட்டத்தின் பொலிஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளுக்கு – சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

மேலும் இது தொடர்பாக ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து இது சம்பந்தமான விசேட கூட்டமொன்று நாளை காலை 9.30 க்கு  ஆளுநரின் அலுவலகத்தில்  நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் இதனால் அப்பகுதி பெண்கள் அல் ஹுதா பள்ளிவாயளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  ஆண்கள் பொது இடங்களில்  பாதுகாப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பான மேலதிக விடயங்களை அறிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  களத்திற்கு சென்றுள்ளார்             

Comments