தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல்

🕔 May 14, 2017

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மான், தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட வாகனத்தை விற்றுப் பெற்ற பணத்துக்கு என்னானது என்பதை, கட்சித் தலைமை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனத்தினைப் பெற்றுக் கொண்ட, மு.கா.வின் தற்காலிக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான், குறித்த வாகனத்தை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தற்காலிகமாக வழங்குவதாக கூறி, சல்மானிடம் கட்சித் தலைவர் ஹக்கீம் ஒப்படைக்க, அதனை சுமார் 20 மாதங்கள் சல்மான் தன்வசம் வைத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், தீர்வையற்ற வாகனத்தினைப் பெற்று அதனை வேறு நபருக்கு விற்பனை செய்து, அதன் மூலம் பெருந்தொகைப் பணத்தினை லாபமாக சல்மான் பெற்றுள்ளார்.

இது குறித்து, மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, இவ் விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என, அவர்கள் கூறினர்.

எவ்வாறாயினும், “தனக்கு எவ்வகையிலும் உரித்தற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை 20 மாதங்களாக சல்மான் அனுபவித்துக் கொண்டிருப்பதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிலையில், அந்தப் பதவிக்குக் கிடைத்த தீர்வையற்ற வாகனத்தை விற்பனை செய்து, சல்மான் பணம் உழைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என, மேற்படி உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனவே, குறித்த வாகன விற்பனை மூலம் கிடைத்த பணத்தினை, தற்காலிக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான், கட்சிக்கு உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், நம்மிடம் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

தொடர்பான செய்தி: மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல்மான், தௌபீக் ஆகியோரின் தீர்வையற்ற வாகனங்கள் யாருக்கு விற்கப்பட்டன; முழு விபரம் அம்பலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்