மாயக்கல்லி மலை விவகாரம்: அமைச்சர் றிசாத் மிகவும் மோசம்; ஹக்கீம் பிரச்சினையில்லை: ஊடகவியலாளர் சொன்ன கதை

🕔 May 10, 2017

– அஹமட் –

கவலறியும் உரிமைக்கான சட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கின் மதிய போசன இடைவேளையின் போது சந்தித்துக் கொண்ட ஊடகவியலாளர்கள், தமக்குத் தெரிந்த மற்றைய ஊடகவியலாளர்களுடன் பலதும் பத்தினையும் பேசிக் கொண்டனர்.

இதன்போது அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர், அங்கிருந்த அம்பாறை மாவட்ட ஊடக நண்பர்கள் சிலரிடம் தெரிவித்த விடயமொன்று, அதிர்ச்சிகரமானது.

அந்த ஊடகவியலாளர் கூறிய விடயம் இதுதான்;

“இறக்காமம் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் அதில் விகாரையமைக்கும் முயற்சிகள் தொடர்பான பிரச்சினை ஆரம்பமான பிறகு, பௌத்த மதம் சார்ந்த பலரையும் சந்தித்து நான் பேசினேன். ஒரு சில பௌத்த பிக்குகள் – மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதை விரும்பவில்லை. அதை அவர்கள் என்னிடம் நேரடியாகக் கூறினார்கள்.

இந்த நிலையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைக்கு இப்போதே, விகாராதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அம்பாறையில் இருக்கின்றார். தீகவாபி மாணிக்கமடு பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர் என்றுதான் அவர் அழைக்கப்படுகிறார்.

அவரை சந்தித்துப் பேசும் சந்தர்ப்பமொன்று எனக்குக் கிடைத்தது. அவ்வேளை, மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் அவருடன் கதைத்தேன். அப்போது அவர் என்னிடம் தெரிவித்த ஒரு விடயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரையமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் எதிர்ப்பில்லை. அந்த விடயம் தொடர்பாக ஹக்கீம் பிரச்சினைப்படுத்தவுமில்லை. அந்த மனிதர் நல்லவர். ஆனால், றிசாத் பதியுதீன்தான் இது விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். மாயக்கல்லி மலையில் விகாரையமைக்கும் எமது செயற்பாட்டை தடுக்கும் வகையில் நடந்து கொள்கிறார்’ என்று என்னிடம் அவர் கூறினார்” என்றார்  சிரேஷ்ட ஊடகவியலாளர்.

இந்த விடயத்தை, மேற்படி ஊடகவியலாளர் கூறிய போது, அந்த இடத்தில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழெட்டு ஊடகவியலாளர்கள் இருந்தனர்.  அத்தனை பேருக்கும் இந்தக் கதை அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.

“முஸ்லிம் காங்கிரசின் தலைவர், மாயக்கல்லி மலை விவகாரத்தில் ஒரு மயிரைக் கூட பிடுங்க மாட்டார்” என்று, மிகவும் கவலையுடன், அந்த விடயத்தைக் கூறி முடித்தார், இறக்காமத்தைச் சேர்ந்த – அந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்.

Comments