சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்
– முன்ஸிப் அஹமட் –
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான அரச அலுவலகங்கள், அண்மைக் காலமாக அம்பாறைக்கு இடமாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து, அம்பாறை மாவட்ட கரையோர முஸ்லிம் மக்கள் கடுமையான கோபத்தினை வெளிப்படுத்தி வருவதோடு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
சாய்ந்தமருதுப் பிரதேசமானது, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் தொகுதியில் அமைந்துள்ளது. மட்டுமன்றி, திருமண உறவின் மூலம் ஹரீசுக்கு – சாய்ந்தமருது சொந்த ஊராகவும் உள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே சாய்ந்தமருதில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வந்த, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிராந்தியக் காரியாலயம், அம்பாறைக்கு மாற்றப்பட்டது. இது குறித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் தெரிவிக்கும் போது, ஹரீஸ் இந்த விடயத்தில் ஆர்வத்துடன் செயற்படவில்லை என்றும், அந்தக் காரியாலயம் அம்பாறைக்கு செல்வதை ஹரீஸ் தடுக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வந்த, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் காரியாலயமொன்றும், அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு, சாய்ந்தமருதில் இயங்கிவரும் ஒவ்வொரு அரச காரியாலயமும் அம்பாறைக்கு மாற்றப்படுவதன் பின்னணியில், அம்பாறை மாவட்டத்தின் சிங்கள அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் எனவும் பேசப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் மூவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேந்தவர்கள்.
இவர்களால், முஸ்லிம் பிரதேசங்களில் இயங்கி வரும் அரச காரியாலயங்களையே காப்பாற்ற முடியவில்லை என்றார், வேறு என்னதான் இவர்களால் செய்ய முடியும் என, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்த நிலையில், சாய்ந்தமருதில் உள்ள அரச அலுவலகங்கள் தொடர்ச்சியாக இடமாற்றப்படுகின்றமையினையும், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் கையாலாகாத அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்யும் வகையில், இளைஞரொருவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘சாய்ந்தமருது, அம்பாறைக்கு இடமாற்றம்’ என, நிலைத் தகவல் ஒன்றினை எழுதியுள்ளார்.
இது – பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.