தேர்தலில் போட்டியிட அரச தொழிலை ராஜிநாமா செய்தவர், முன்னைய பதவியை மீளப்பெற முடியாது: பொது நிருவாக அமைச்சு அறிவிப்பு

🕔 April 30, 2017

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச தொழிலை ராஜிநாமா செய்யும் ஒருவர், மீண்டும் அவர் ராஜிநாமா பதவியை பெற்றுக் கொள்ள முடியாது என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் சமீபத்தில் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜிநாமா செய்யும் அரச உத்தியோகத்தர் ஒருவர், குறித்த தேர்தலில் தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், மீண்டும் தான் வகித்த அரச உத்தியோகத்தினைப் பெற்றுக் கொள்ளும் மோசமானதொரு நிலை இருந்து வந்தது.

ஆயினும் இனி அவ்வாறு முடியாது என்று, அவர் மேலும் கூறினார்.

இருந்தபோதும், குறித்த நபர் மீண்டும் அரச உத்தியோகம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என செயலாளர் ரட்ணசிறி தெரிவித்தார். ஆனால், அவர் ராஜிநாமா செய்த பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மேற்படி அமைச்சரவை அங்கீகாரத்துக்கு இணங்க, சுற்று நிருபம் ஒன்றினை இந்த வாரம் அமைச்சு வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

Comments