பேரினவாதத்தின் சூனியம்

🕔 April 29, 2017

– பஷீர் சேகுதாவூத் –

சிங்கள அரசியல் தமது பேரினத்தின் பெரும்பான்மையை இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களிலும் நிறுவும் முயற்சியில் இறங்கி நீண்ட காலமாயிற்று. வடக்கில் மணலாறு எனப்படும் தமிழ்ப் பிரதேசத்தை வெலி ஒயா எனப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றிய மாபெரும் திட்டத்தையும், வவுனியாவில் சிங்களவர்களின் சனத் தொகையை அரச அனுசரணையுடன் அதிகரிக்கச் செய்த நடவடிக்கைகளையும் போல, கிழக்கில் திருகோணமலை , அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் திட்டமிட்டுச் செய்த பெரும்பான்மை இன விவசாய, மீனவக் குடியேற்றங்களும் தமிழ் பேசுவோருக்கு பழைய அனுபவமாகும்.

பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலும் தமிழ் பேசுவோர் குறிப்பிடத்தக்க அளவு பெரிய மக்கள் குழுமமாக வாழ்ந்திருந்து, பின்னர் குறைவடைந்ததை வரலாறு காட்டுவது வேறு கதை.

இடையில் குறுக்கிட்ட உள்நாட்டுப் போர் இத்திட்டத்தை 30 ஆண்டுகளாக ஒத்திப் போடும் நிர்ப்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. யுத்தம் முடிவுற்ற பின்னர் மேற்சொன்ன திட்டம் தீவிரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதன் ஒரு கட்டமே இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை வைப்பும், பன்சல அமைக்கும் பலாத்கார நடவடிக்கையுமாகும். இது சட்டத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் புறம்பான செயல்பாடாகும்.

இப்போது, புதிய வியூகத்தின் அடிப்படையில் – பௌத்தக் கடவுளின் நண்பர்களுக்கு கிழக்கு குடியேற்றம் அவசரமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகத் தென்படுகிறது. இவர்களுக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு என்கிற அரசியல் கோரிக்கைக்கு எதிராக செயல்படுவதை விட, கிழக்கை உடைக்கும் வகையில் அவர்களின் குடியேற்றக் கொள்கையை செயற்படுத்துவது அவசரத் தேவையாக உணரப்படுகிறது. விசேடமாக அம்பாறை மாவட்டத்தை சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமாக ஆக்கிக் கொள்வதோடு, இம்மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களை நிலத் தொடர்பற்றதாக்கிச் சிதைப்பது அவசரமும் அவசியமுமானதாகக் கருதப்படுகிறது.

ஓர் இனம் எங்காவது ஒரு பிரதேசத்தில் அது பெரும்பான்மை என நிரூபிக்க, அங்கு சனத்தொகையில் ஏனைய இனங்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதும், கூடவே அதிக நிலப் பரப்புக்கு சொந்தக்காரர்களாக இருப்பதும், மற்ற இனங்கள் நிலத் தொடர்பற்று வாழ்வதும் முக்கியம் என அவர்கள் கருதுகிறார்கள். இந்த இடத்தில்தான் இலங்கை முஸ்லிம்கள் தடுமாறும் இனமாகவும், குடியேற்ற வஞ்சிப்புக்கு உள்ளாகும் சமூகமாகவும் இருப்பதைக் காணலாம்.

முழு இலங்கையையும் எடுத்துநோக்கினால், முஸ்லிம்கள் ஓர் இனமாக அடையாளம் காணப்பட, பெரும்பான்மை மக்கள் தரப்பாக அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம்தான் மிகக் குறைந்தளவிலான தகமையோடு காணப்படுகிறார்கள். இந்த முஸ்லிம் சமூகப் பலவீனத்தை சிங்களம் தனக்கு சாதகமாக பாவிக்கும் உத்தியில் இறங்கியிருக்கிறது.

திருமலையில் சிங்களவர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைப் பெறும் சன அடர்த்தியும், அம்பாறையில் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினரைப் பெறும் சன அடர்த்தியும் ஏற்கனவே செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் வாயிலாக கிடைத்துள்ளது. மட்டக்களப்பில் ஒரு சிங்கள உறுப்பினரைப் பெற்றுக்கொளும் வகையில் புல்லுமலையை ஊடறுத்து, சிங்களக் குடியேற்றத்தைச் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இந்த இலக்கை அடைவதற்காகவே இலுப்பையடிச் சேனையில் இருந்த முஸ்லிம் அடக்கத்தலத்தலம் அமைந்துள்ள இருபது ஏக்கருக்கும் அதிகமான காணியைப் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.

திருமலைத் துறைமுகப் பரப்புக்குள் அமைந்திருக்கும் சீனன்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்கும் ஒப்பத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அத்துறைமுக அபிவிருத்திக்கும், அந்நகர அபிவிருத்திக்கும் இந்தியாவே பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்தியாவின் மேற்பார்வையும், கண்காணிப்பும் அப்பிராந்தியத்தில் இருக்கும். திருமலை மாவட்டத்தில் இடக்கு முடக்காகச் செய்யும் எந்த நடவடிக்கையும் தனது பிராந்தியப் பாதுகாப்புக்குக் குந்தகமாக அமையும் என்பதால் இந்தியா பேரினவாத அத்துமீறல்களை அனுமதிக்காது.

இவை மட்டுமன்றி காலப் போக்கில் இந்தியா, தனது நலனை முன்னிறுத்தி முழு கிழக்கு மாகாணத்திலும் தன்னை மீறி எதுவித செயற்கை மாற்றங்களையும் நிகழ்த்த அனுமதிக்கும் வாய்ப்பில்லை. இந்த நிலைமை சிங்களப் பேரின அத்துமீறல்களைச் செய்ய விரும்புவோருக்குப் பாதகமானது.

இவ்வாறான சூழ்நிலை ஒன்றுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்பதை சிங்களப் பெரும்பான்மை அரசும், பௌத்த மேலாதிக்கவாதிகளும் முன்னரே உணர்ந்ததன் அடிப்படையில்தான் அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமது காணிப் பறிப்பை அசுர கதியில் முடுக்கி விட்டுள்ளனர். திருமலையில் திட்டமிட்ட திருகுதாளங்களைச் செய்ய இனி அவகாசமில்லை என்பதால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகள் இந்தியாவின் கண்காணிப்புக்குள் அகப்பட எடுக்கும் கால அவகாசத்துக்குள் அவசர அவசரமாக வேலைகள் நடக்கின்றன.

இந்த அரசாங்கத்தினதும், தந்திரோபாயம் வகுக்கும் பௌத்த தீவிரவாதிகளினதும் உபாய நகர்வுகளை உணராத அல்லது ஆய்வுக்கு உட்படுத்தி எதிர் உபாயங்களை வகுக்க நாதியற்ற சம்பந்தர் மற்றும் ஹக்கீம் ஆகிய சிறுபான்மை அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து மாயக்கல்லி மலை விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர் ஏற்கனவே தலையிட்டுத்தான் மாயக்கல்லி மலையில் சூனியம் வைத்தனர் என்பதை ஊகிக்க நாதியற்றவர்களாகவா இத்தலைவர்கள் இருக்கின்றனர்?

சிறுபான்மை மக்களின் உணர்வார்ந்த விவகாரங்களில் ஏமாற்று அரசியலைச் செய்வது, எதிர்கால சந்ததியை மிகவும் ஆபத்துக்குள் தள்ளிவிடக் கூடியது.

ஐந்து மாதங்களுக்கு முன்னர் சிலை வைத்தது ஜனாதிபதிக்குத் தெரியாமலா இருந்தது? சிலை வைத்த போதே அவ்விடத்தில் பன்சல ஒன்று கட்டும் திட்டம் இருந்ததையும் அவர் புரியாமலா இருந்திருப்பார்? இவையெல்லாம் அறியாத அப்பாவியாக மைத்திரிபால சிறிசேனவை இவ்விரு தலைவரும் கருதினார்களா என்ன?

ஜனாதிபதியுடனான சந்திப்பினால் நியாயம் கிடைக்கும் என்றும், அவர் தலையிட்டு மாணிக்கமடு அத்துமீறலை நிறுத்துவார் என்றும் சந்திப்புக்குச் சென்ற குழு நம்பிக்கை வெளியிட்ட செய்திகள் வெளிவந்துள்ளன.

சரி நல்லது, எவ்வளவு கால அவகாசத்தில் சிலை அகற்றப்படும்? பன்சல அமைக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு எத்தனை நாட்களுக்குள் ஜனாதிபதி உத்தரவிடுவார்?இவை எதுவும் நடக்கவில்லை என்றால் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் இருவரும் என்ன மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் கால அவகாசம் எவ்வளவு? ஒன்றுமே நடக்கவில்லை என்றால் மக்களுக்குச் சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?

எதுவுமே நடக்கவில்லை, உங்கள் கோரிக்கை கணக்கெடுக்கப்படவில்லை என்றால் அரசாங்கத்துக்கு எதிர்வினையாற்ற சிறுபான்மைத் தலைவர்களுக்குப் பல வழிமுறைகள் உள்ளன. முக்கியமாக இரு தலைவர்களும் அரசுக்கு வழங்கும் ஆதரவை மீளப் பெறுவோம் என்று கூற முடியும். இதன் மூலம் வடக்கு கிழக்கில் அதி கூடிய மக்களாதரவைப் பெற்றுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவற்ற அரசாக இக்கூட்டரசை மாற்ற முடியும். இவ்வாறு திகழ்ந்தால், சர்வதேச ஆதரவை அரசாங்கம் இழக்க வேண்டி வரும், பொருளாதார நெருக்கடி ஏற்படும், ஐ.நா மனித உரிமைகள் சபை வழங்கிய இரண்டு ஆண்டு கால அவகாசம் கேள்விக்குள்ளாகும். இவற்றுக்கு அச்சப்பட்டு ஜனாதிபதியும், பிரதமரும் தலையீடு செய்து மாயக்கல்லி மலையில் நடக்கும் அநீதியைத் தடுத்து நிறுத்துவர். கூறுங்கள் தலைவர்களே! நமக்கு நடக்கும் ஊறுகளை நிறுத்துங்கள் தலைவர்களே!!

இல்லாவிட்டால் கெபினட் அமைச்சர் பதவியையும், அதற்கு நிகரான வசதிகள் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் மட்டும் நீங்கள் வைத்துக் கொண்டு, நீங்கள் அடாத்தாக உங்களோடு வைத்திருக்கும் தமிழ் மற்றம் முஸ்லிம் மக்களைத் தயவு செய்து ராஜினாமாச் செய்துவிடுங்கள். அவர்கள் சுயமாக விடுதலையை அடையட்டும்.

(பஷீர் சேகுதாவூத்தின் பேஸ்புக் பக்கத்திலிருந்து…)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்