வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்க, முதலமைச்சர் வகுத்த திட்டம்; மாகாணசபை உறுப்பினர் லாஹிரை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்

🕔 April 29, 2017

– முன்ஸிப் அஹமட் –

நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்த வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுமாறு கோரி, திருகோணமலையில் நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து நடத்தியவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் எனத் தெரியவருகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் வேண்டுகோளுக்கு இணங்கவே, மேற்படி ஆர்பாட்டத்தினை லாஹிர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாண சபை அமர்வு கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபை கட்டிட நுழைவாயில் முன்பாக, வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டமொன்றினை நடத்தினர்.

இதனையடுத்து, மறியல் போராட்டம் நடத்திய வேலயற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளை, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அழைத்தார். இதற்கிணங்க, முதலமைச்சரின் அலுவலகத்துக்கு வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் சிலர் சென்றிருந்தனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் முதலமைச்சருக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது முதலமைச்சர் கடுமையாக நடந்து கொண்டார். மேலும், அங்கிருந்த சில கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளை தூசண வார்த்தைகளில் திட்டினார்கள். இவையனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருந்தன.

இந்த நிகழ்வு, முதலமைச்சருக்கு மிகவும் அவமானத்தை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாகவும்,  மாகாணசபை உறுப்பினர் லாஹிருக்கு  – முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைவாகவே, நேற்றைய சட்டத்தரணிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

மாகாணசபை கட்டிடத்தின் முன்னால், கடந்த செவ்வாய்கிழமை வேலையற்ற பட்டதாரிகள் – மறியல் போராட்டம் நடத்தியபோது, அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில், போராட்டத்தை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த உத்தரவின் பிரதியினை, போராட்டம் நடத்திய  வேலையில்லா பட்டதாரிகளிடம் பொலிசார் ஒப்படைத்தபோது, அதனை அவர்கள் கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், தனது கட்சியின் மாகாண சபை உறுப்பினர் லாஹிரை வைத்து, வேலையில்லா பட்டதாரிகளை பழிவாங்குவதற்காக  திட்டமிட்டார் எனக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் – நேற்று வெள்ளிக்கிழமை, நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த வேலையில்லா பட்டதாரிகளை கைது செய்யுமாறு, சட்டத்தரணிகள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்: 

01) நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

02) கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்