அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

🕔 April 29, 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது.

செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக் கல்லூரி உட்பட பல அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பதிலாக புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நிறுவனங்களுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊடகத்துறையில் விரிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், ஊடகத்துறை அமைச்சு மற்றும் இரண்டு அரச ஊடகங்களின் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் பதவியிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் உயர் பதவிகள் சிலவற்றிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜேர்மன் நாட்டுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட உள்ளார்.

எவ்வாறாயினும் நீக்கப்படும் நிறுவனங்களின் பிரதானிகள் வேறு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments