நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

🕔 April 28, 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த உத்தரவின் பிரதியை, ஆர்ப்பாட்டம் நடத்திய வேலையற்ற பட்டதாரிகளிடம் பொலிஸார் வழங்கியபோது, ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் அப்பிரதியைக் கிழித்து, காலில் போட்டு மிதித்ததுடன் அவதூறாகவும் பேசியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவை மீறியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், சம்பவம் நடைபெற்ற வேளையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, சட்டத்தரணிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments