அரைவாசி ‘உடைந்தார்’ கின்னஸ் பெண்; பறிபோனது சாதனை

🕔 April 21, 2017
– எஸ். ஹமீட் –

லகத்திலேயே மிகக் கூடுதலான  நிறை கொண்ட பெண் என்று கின்னஸ்  புத்தகத்தில் இடம்பெற்ற 500  கிலோ கிராம் எடையுடைய எகிப்தைச் சேர்ந்த இமான் அஹமது எனும் பெண்ணுடைய எடையானது, தற்போது அரைவாசியாகக் குறைந்துள்ளது.

விஷேட எடைக் குறைப்புச் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவின் மும்பை நகரிலுள்ள  சைஃபி மருத்துவமனைக்கு இவர் வருகை தந்ததும், விஷேடமாக அவருக்கெனத் தயாரிக்கப்பட்ட படுக்கையிலிருந்தே விமானத்தில் கிரேன் மூலம் இறக்கப்பட்டு அவர் மருத்துவ மனைக்குக் கொண்டு சொல்லப்பட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போது அவருடைய நிலைவரம் என்ன தெரியுமா?

இமான் அஹமதுவினுடைய எடை முன்னர் இருந்ததைவிடச் சரி பாதியாகிவிட்டது. 500  கிலோகிராம் 250  கிலோ கிராமாகக் குறைந்துவிட்டது. இந்தச் செய்தி அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி,  அவருக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கூட மிக்க மகிழ்ச்சியையளித்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சைஃபி மருத்துவமனையில், மருத்துவர் முபஸல் லக்டாவாலாவின் தலைமையிலான மருத்துவர் குழுவினர் இமானுக்கு  எடைக்குறைப்பு அறுவைசிகிச்சையை நடாத்தினர். தொடர்ந்தும் அவருக்குப் பல்வேறு சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இமான் தற்போது  வீல் சேரில் நீண்ட நேரம் உட்காரக் கூடியவராக இருக்கின்றார் என, மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன. எனினும் இளமைப்பருவத்தில் இமானுக்கு  ஏற்பட்ட பக்கவாத நோயினால் உடலின் ஒரு பகுதி முடங்கிப் போயிருப்பதாகவும் அவருக்குப் பேசுவதிலும், உணவுகளை உட்கொள்ளுவதிலும்  கஷ்டங்கள் இருப்பதாகவும் டொக்டர் முபஸல்  தெரிவித்துள்ளார்.

ஆயினும் தற்போது  இமான் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது  கின்னஸ் சாதனை பறிபோய்விட்டதைப் பற்றி அவருக்கு எந்தக் கவலைகளும் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்