திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்
🕔 April 19, 2017
– க. கிஷாந்தன் –
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.
இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மணிவேல் புஸ்பராஜ் என்பவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
ஹட்டன் குடாஒயா தோட்டத்தில் இடம்பெற்ற 05 நாள் திருவிழாவில், இறுதிநாளான நேற்று மஞ்சல் நீராட்டு விழா இடம்பெற்றது. இதன்போது இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி உயிரிழப்பு நிகழ்ந்தது.
சம்பவத்தில் படுங்காயமடைந்த நால்வர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.