வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு

🕔 April 18, 2017

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயகவை இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

குறித்த கொலை வழக்கின் சாட்சிகளை மறைக்க முற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனுர சேனநாயக தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, கிடைக்கப் பெற்ற ரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக, இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க நீதிமன்றில் கூறினார்.

வசிம் தாஜூடினின் கடனட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொலை இடம்பெற முன்னரும் அதற்கு பின்னரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் தகவல் பதிவேட்டில் இருந்து ஆவணங்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, பிரதம சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர மீதான ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்வரும் 21ம் திகதியளவில் நிறைவு செய்யவுள்ளதாக, வைத்திய சபை தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்