நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம்
நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு எதிரணியில் அமரவுள்ள குழுவுக்கு தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே, அஜித் மான்னப்பெரும மற்றும் நலின் பண்டார ஆகியோரின் பெயர்களும் இந்தக்குழுவின் தலைமைப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக்குழு’ என்று, இந்தக் அணியினர் அழைக்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாற்றுக் குழுத் தொடர்பில் இதுவரை யாரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
ஐ.தே.கட்சி ஆட்சியமைத்திருந்த 1965ஆம் ஆண்டு, டட்லி சேனாநாயகவின் அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ‘இஞ்சிக் குழு’ எனும் பெயரில் எதிர்க்கட்சியில் அமர்ந்து செயற்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.