ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

🕔 April 14, 2017

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது.

மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி வகித்தவர்களில் அநேகமானோர் கல்விமான்கள் எனவும், புத்திஜீவிகள் என்றும் போற்றப்பட்டவர்களாவர்.

மேலும், மு.காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தோரில் பலர், மு.காங்கிரசின் தலைவர்களுக்கு சமாந்தரமாகவும், சிலர் – புத்திசாதுரியத்தில் தலைவர்களை விஞ்சியவர்களாகவும்  இருந்தனர்.

இவர்களுக்கு உதாரணமாக சேகு இஸ்ஸதீன் மற்றும் பசீர் சேகுதாவூத் ஆகியோரைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.

இது இவ்வாறிருக்க, மு.காங்கிரசின் தவிசாளராகப் பதவி வகித்த பசீர் சேகுதாவூத், அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரசின் சிரேஸ்ட பிரதித் தலைவராகப் பதவி வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அறியப்படும் ஏ.எல். அப்துல் மஜீத், மு.கா.வின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முழக்கம் மஜீத்தை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் தவிசாளர் பதவிக்கு பிரேரித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், மு.கா.வின் தவிசாளராக முழக்கம் மஜீத் நியமிக்கப்பட்டமை குறித்து, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அதிருப்தியுடன் உள்ளனர். எவ்வாறாயினும், இதனை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை.

இருந்த போதும், மேற்படி கட்சி முக்கியஸ்தர்கள் தமக்கு நெருக்கமானவர்களிடம் முழக்கம் மஜீதுக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பான தமது அதிருப்தியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில், மு.கா. முக்கியஸ்தர் ஒருவர், தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம், மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நையாண்டித்தனமாகத் தெரிவித்த பகிடியொன்று, தற்போது அரசியலரங்கில் பிரபலமாகப் பேசப்படுகிறது.

மு.கா. பிரமுகர்: வீட்டுக் கூரையில் போட்டிருக்கும் ஓடு ஒன்று உடைந்து விட்டால் நாம் என்ன செய்வோம்?

நண்பர்: உடைந்த ஓட்டை கழற்றி விட்டு, நல்ல ஓட்டினைப் போடுவம்.

மு.கா. பிரமுகர்: ஆனால், மு.கா. தவிசாளர் நியனத்தில் தலைவர் ரஊப் ஹக்கீம் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

நண்பர்: என்ன செய்திருக்கிறார்?

மு.கா. பிரமுகர்: ஓட்டைக் கழற்றி எறிந்து விட்டு, அது இருந்த இடத்தில் கிடுகை பொருத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்