இறக்காமம்; கந்தூரி சோறு நஞ்சானது எவ்வாறு: ஆய்வு அறிக்கையில், காரணம் வெளியானது
இறக்காமம் – வாங்காமம் பகுதியில் சமைத்து வழங்கப்பட்ட உணவு விசமடைந்தமைக்கு ஒருவகை பக்டீரியாவே காரணமென உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை, இந்த விடயத்தை உறுதிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
மக்கள் உட்கொண்ட இறைச்சினூடாகவே இந்த பக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்ததாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
இறக்காமம் – வாங்காமம் பகுதியில் க்டந்த புதன்கிழமை நடைபெற்ற கந்தூரி நிகழ்வில், சமைத்து வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டமை காரணமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 1000 சுகயீனமடைந்ததோடு, மூன்று பேர் மரணமடைந்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உணவு சமைத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, உணவு மாதிரிகள் கிடைக்காமை காரணமாக நோயாளர்களின் குருதி, சிறுநீர், மலம் என்பன ரசாயனப் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், அவர்கள் உட்கொண்ட உணவில் பக்டீரியாத் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டொக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.