புதிய தேர்தல் முறைமைக்கு, மு.காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கின்றது: சம்மாந்துறையில் ஹக்கீம்

🕔 April 12, 2017

– பிறவ்ஸ் முகம்மட் –

புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப்பட்டால், முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும் என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

எனவே, இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க உட்படுத்துமாறு வேண்டிக்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

‘அபிவிருத்தி இலக்கின் இன்னுமோர் அடைவுத் தருணம்’ எனும் தலைப்பில் நேற்றிரவு சம்மாந்துறையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் மேலும் கூறியதாவது;

புதிய தேர்தல் சீர்திருத்தம் மூலம் தொகுதிவாரியான தேர்தல் முறையை
அறிமுகப்படுத்தினால் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சந்தேகத்துக்கிடமான நிலைக்கு வந்துவிடக்கூடும். இந்த திருத்தத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான மாற்று முறையாக எங்களது பிரேரணையை முன்வைத்து, அதனை பரிசீலனைக்க உட்படுத்துமாறு வேண்டிக்கொண்டுள்ளோம்.

தொகுதிவாரி தேர்தல் முறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவளிக்கக்கூடாது என்று நாங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம்.

சம்மாந்துறை பிரதேசத்தை அம்பாறை நகரம்போன்று நாங்கள் அபிவிருத்தி செய்யவுள்ளோம். சம்மாந்துறை பிரதான வீதியில் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளுடன் கூடிய கடைகளை அமைத்து, வீதியின் மத்தியில் தெரு விளக்குகளை நிறுவி அதிநவீன பாதையாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் முன்மொழிந்திருக்கிறார்.

சம்மாந்துறையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காணியை சுவீகரித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அந்தக் காணியில் அழகான சந்தைக் கட்டிடம், விரிவான பஸ் தரிப்பிடம் என்பவற்றை அமைப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். இதற்கு எவ்வித தடைகள் வந்தாலும், அவற்றையும் பொருட்படுத்தாது இந்த அபிவிருத்தியை செய்தே தீருவோம்.

கல்முனை, சம்மாந்துறை மற்றும் நிந்தவூரின் சில பகுதிகளையும் சேர்த்து பாரிய நகர அபிவிருத்தி திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கான திட்டமிடலுக்கு மாத்திரம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டவரைபு மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளர் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அபிவிருத்தியாக என்றும் நிலைத்துநிற்கும்.

சம்மாந்துறையில் 400 மீற்றர் ஓட்டப்பந்தய மைதானத்தை அமைப்பதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். தொழில்நுட்பக் கல்லூரிக்கு பின்னாலுள்ள காணிக்கு இந்த மைதானத்தை அமைப்பதற்கான திட்டவரைபை செய்யுமாறு நகர திட்டமிடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இந்த மைதானத்தை அமைப்பதற்கு உதவுவதாக கூறியுள்ளார்.

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 2,000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதற்கான திட்டமிடல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன், சம்மாந்துறை கைகாட்டி சந்தியிலிருந்து அம்பாறை வீதி வரையான பண்டுவாய்க்கால் வீதி அவிருத்திக்காக 40 மில்லியன் ரூபாவை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன்.

இந்த வருட நடுப்பகுதிக்குள் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டுவரும் ஆடைத் தொழிற்சாலையை திறந்துவைப்பதற்கு முதலமைச்சர் நஸீர் அஹமட் இணக்கம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அம்பாறைக்கு வேலைக்குச் செல்லும் யுவதிகளுக்கு காலடியிலேயே தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு வெளியிலுள்ளவர்களை விமர்சனம் செய்வது தலைமையின் கடைமையல்ல. இந்த இயக்கம் பலவீனப்படுத்தப்பட்டால், முழு முஸ்லிம் சமூகமும் பலவீனப்படுத்தப்படும் என்ற அபயாத்தை உணர்ந்தவர்களாக, இந்த இயக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்