சும்மா வந்து சும்மா போன ஹாபிஸ் நஸீர்; பாதிக்கப்பட்டவர்களை வைத்து ஊடகப் பிரபல்யம் தேடும் முயற்சிக்கு மக்கள் கண்டனம்

🕔 April 9, 2017

– அஹமட் –

றக்காமம் பிரதேசத்தில் நஞ்சடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, இறக்காமத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், அந்த மக்களுக்கு எவ்வித உடனடி உதவிகளையும் மேற்கொள்ளாமல் ‘சும்மா வந்து சும்மா சென்றமை’ தொடர்பில் அப் பிரதேச மக்கள் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கின்றார்கள்.

கடந்த புதன்கிழமை வாங்காமம் பிரதேசத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி சாப்பாட்டினை உட்கொண்டமையினால், ஆயிரக்கணக்கான மக்கள் வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் கடுமையான காய்ச்சல் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக, வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மூன்று பேர் மரணமடைந்தனர். அவர்கள் மூவரும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், இறக்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை காண்பதற்காக, நேற்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  வருகை தந்திருந்தார்.

பாதிக்கப்பட்ட மக்களில் கணிசமானோர் ஏழைகள். இவர்களுக்கு உடனடி உதவிகள் தேவையாக உள்ளன. இருந்தபோதும், அங்கு சென்ற முதலமைச்சர் ஒரு ரூபாய் பணத்தை கூட அவர்களுக்கு வழங்காமல், வெறுங்கையுடன் அந்த மக்களை சந்தித்து விட்டு, அதன்போது எடுக்கப்பட்ட படங்களை ஊடகங்களுக்கு வழங்கி வெற்றுப் பிரபல்யம் தேடிக் கொள்வதாகவும், அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறியளவிலேனும் உடனடி உதவிகளைக் கூட செய்யாமல், வெறும் ஊடக பிரபல்யத்துக்காக மட்டும் அங்கு வந்து சென்றமை வெட்கத்துக்குரிய விடயமாகும் என்றும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

‘கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், இறக்காமம் பிரதேசத்துக்கு அதிரடி விஜயம்’ என, அவருக்கு சார்பான சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தபோதும், அவருடைய வருகையினால் இறக்காமத்தில் ஒரு துரும்பு கூட அசையவில்லை என்று, அங்குள்ள சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

இதேவேளை, நேற்றைய தினம் இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், மேற்படி சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இறக்காமம் வைத்தியசாலைக்குச் சென்று சந்தித்ததோடு, அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொக பணத்தினை வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் வழங்கியிருந்தார்.

மேலும், இந்த அனர்த்தத்தின் காரணமாக மரணமடைந்த மூவரின் வீடுகளும் சென்ற அமைச்சர் றிசாத், அவர்களின் குடும்பத்தவர்களுக்கு, தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகை பணத்தை கையளித்ததோடு, மரணித்தவர்களில் இருவரின் குடும்பங்களுக்கு இரண்டு வீடுகளை அமைத்துத் தருவேன் எனவும் உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மக்களின் முதலமைச்சர், அவரின் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெறுங்கையுடன் சந்தித்துச் சென்றுள்ள நிலையில், அமைச்சர் றிசாத் பதியுதீனின் மேற்படி நடவடிக்கையானது, அப் பிரதேச மக்களால் கருணை கொண்ட மனிதாபிமானதொரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்