இறக்காமத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிசாத் பணவுதவி; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

🕔 April 8, 2017

– எம்.ஏ. றமீஸ் –

விசமடைந்த உணவினை உண்டமை காரணமாக, இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்துக்கு இரண்டு வீடுகளை நிர்மாணித்துத் தருவேன் என அமைச்சர் றிசாத் பதியுதீன் வாக்குறுயளித்துள்ளார்.

விசமடைந்த உணவினை உட்கொண்டமை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று சனிக்கிழமை இறக்காமம் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.

இதன்போது, மரணமடைந்தவர்களின் வீடுகளுக்குநேரடியாகச் சென்று துக்கம் விசாரித்த அமைச்சர், வருமானம் குறைந்த இரு குடும்பத்தவர்களுக்காக இரண்டு வீடுகளைநிர்மாணித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதுடன், மரணித்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு ஒரு தொகை பணமும் வழங்கினார்.

இதேவேளை, விசமடைந்த உணவினை உட்கொண்டமையினால் பாதிக்கப்பட்டு, இறக்காமம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசிய அமைச்சர் றிசாத் பதியுதீன், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில், ஒருதொகைப் பணத்தினை வைத்தியசாலை நிருவாகத்தினரிடம் கையளித்தார்.

அத்தோடு இறக்காமம் உள்ளிட்ட அதனைஅண்டிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர்மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில், வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த  ஆயிரத்திற்கும் அதிகமாக நோயாளர்களில் பெரும் எண்ணிக்கையானோர் சுகமடைந்து வருவதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாங்காமம் கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞ்சடைந்தமையால், அவ் உணவினை உட்கொண்டமூவர் மரணடைந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுகவீனமுற்ற நிலையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது 22 நோயாளர்களே இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வேறு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையானோர் தமது இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவர்களில் கணிசமானோ,ர் இன்றைய தினம் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கந்தூரி வைபவத்தில் வழங்கப்பட்ட உணவு நச்சுத் தன்மை ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறியும் வகையில் நேற்று மாலை அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோயியல் நிபுணத்துவ உயரதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள், சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்உள்ளிட்டவற்றை பகுப்பாய்வுக்காக கொண்டு சென்றனர்.

குறித்த பகுப்பாய்வின் இறுதி அறிக்கை 48 மணித்தியாலங்கள் முதல் 72 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்டகாலப்பகுதிக்குள்ளேயே வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதால், இதற்கான அறிக்கை நாளை திங்கட்கிழமை கிடைக்கக் கூடியதாய் அமையும் என இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம். றசீன் தெரிவித்தார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்