அம்பாறை வருகிறார் ஹக்கீம்; கல்முனை, பொத்துவிலில் நிகழ்வுகள்

🕔 March 29, 2017
– பிறவ்ஸ் முகம்மட் –

“மண்­­­ணெல்லாம் மரத்தின் வேர்­கள்” எனும் தொனிப்­பொ­ருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் எதிர்வரும் வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில், கல்முனை, பொத்துவில் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது.

அபி­வி­ருத்தி திட்டங்களை பொது­மக்­களிடம் கைய­ளிக்கும் நிகழ்வுகளும், பொதுக்கூட்டங்களும் இதன்போது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலை­மையில் வௌ்ளிக்­கி­ழமை கல்­மு­­னையில் முதல் நாள் நிகழ்வு நடை­பெறவுள்ளது.

அன்றைய நாளில், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம், சேனைக்குடியிருப்பு சனசமூக சிகிச்சை நிலையம், இஸ்லாமபாத் சனசமூக சிகிச்சை நிலையம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடம் மற்றும் கல்முனை ஆயுர்வேத வைத்தியாலை என்பன திறந்து வைக்கப்படவுள்ளன.

அத்துடன், கல்முனை றோயல் வித்தியாலயத்தின் நீண்டநாள் குறைபாடாகவுள்ள வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகை­யில், பிரதி அமைச்சர் ஹரீ­ஸின் முயற்சியினால் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. அதன்­பின்னர், கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக பொதுக்­கூட்டம் நடை­பெ­றவுள்­ளது.

மறுநாள் சனிக்­கி­ழமை பொத்­துவில் மண்ணில் அபிவி­ருத்தி விழாவும் பொதுக்­கூட்டமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்­பா­ளரும் சுகா­தார பிரதி அமைச்சருமா­ன பைசால் காசிம் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­கழ்­வு­களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், ஐ.எல்.எம். மாஹிர், கட்­சியின் தவி­சாளர் ஏ.எல்.ஏ. மஜீட் மற்றும் கல்­மு­னை மாநகர­சபை மற்றும் கட்­சியின் உள்­ளூ­ராட்­சி­மன்ற பிர­தி­நி­திகள் பலரும் கலந்து கொள்­ள­வுள்­ள­னர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்