மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்

🕔 March 29, 2017

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு  -விசாரணையொன்றினை நேற்று செவ்வாய்கிழமை நடத்தியதாகத் தெரியவருகிறது.

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தகம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டம் மற்றும் கட்சிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சொத்து மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில்,  குறித்த நூல் வெளியிடப்பட்டிருந்தது. தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி எனும் பெயரில் இந்தப் புத்தகம்  வெளியிடப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் பல்வேறு ஆவணங்களின் பிரதிகள் அந்தப் புத்தகத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

குறித்த புத்தகம், நாடு முழுவதும் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சென்றடையச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இப் புத்தகம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணையொன்றின் நிமித்தம் சமூகம் தருமாறு பஷீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனடிப்படையில், நேற்றைய தினம் அவர் விசாரணைக்காக தனது சட்டத்தரணியுடன் சமூகமளித்திருந்தார்.

இதேவேளை, குறித்த புத்தக வெளியீட்டுடன் தனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என, விசாரணையின் போது பஷீர் தெரிவித்தார் என, அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்