மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

🕔 March 29, 2017

– அஹமட் –

மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது.

உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத நிலையிலேயே அவரை, தவிசாளராக நியமிப்பதாக கட்சியின் தலைவர் ஹக்கீம் அறிவித்தார்.

தவிசாளராகப் பதவி வகித் பசீர் சேகுதாவூத், அந்தப் பதவியிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கையின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த பேராளர் மாநாட்டில் மு.காங்கிரசின் தவிசாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

குறி வைத்து கோரிய தவம்

இந்த நிலையில், தவிசாளர் பதவிக்கு நபரொருவரை நியமிக்க வேண்டும் என்று, மு.காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

மு.காங்கிரசின் தவிசாளர் பதவியினை அடைந்து கொள்வதற்கு, மாகாணசபை உறுப்பினர் தவம் – பெரும் ஆசையில் உள்ளார் என்று, ஊடகங்களில்  பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையிலேயே, கட்சிக்கு தவிசாளர் ஒருவரை நியமிக்குமாறு நேற்றைய உயர்பீட கூட்டத்தில் தவம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மு.காங்கிரசின் தவிசாளர் பதவிக்கு அடுத்த நிலையிலுள்ள சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியினை வகித்த முழக்கம் மஜீத்தை, தவிசாளர் பதவிக்கு நியமிப்பதாக, மு.கா. தலைவர் அறிவித்தார்.

“அப்படியென்றால்,  சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை யாருக்குக் கொடுப்பது” என்று, இதன்போது தவம் கேள்வியெழுப்பினார். கட்சியின் பதவிகளின் அடிப்படையிலான சிரேஸ்டத்துவத்தின் அடிப்படையில், அந்த நியமனத்தை வழங்க முடியும் என்று ஹக்கீம் அதற்கு பதிலளித்தார்.

சட்டச் சிக்கல்

இதேவேளை, மு.கா.வின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளாரே தவிர, அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், கட்சியின் தவிசாளர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமித்திருப்பது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பளம் பெறும் தவிசாளர்

மு.கா. தலைவரின் அதிகாரத்திலுள்ள  நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் வரும், தேசிய நீர் வழங்கல் வேலைத் திட்டமொன்றின் இணைப்பாளராக. புதிய தவிசாளர் முழக்கம் மஜீர் நியமிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக, இவர் சுமார் 02 லட்சம் ரூபாய் வரையில் சம்பளம் பெற்று வருகின்றார் என அறிய முடிகிறது.

ஏற்கனவே, கட்சியின் செயலாளராருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்