மாலையிட்ட மன்னன்: ஹாபிஸ் நஸீரின் ‘கடவுள்’ பக்தியும், உலமா சபையின் ஊமைத்தனமும்

🕔 March 28, 2017

– முன்ஸிப் அஹமட் –

கதை – 01

மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், சர்ச்சையொன்றில் மாாட்டிக் கொண்டார். ஒரு வெள்ளிக்கிமையன்று முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகை நடைபெறும் நேரத்தில், தீகவாபி விகாரையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வொன்றில் அஷ்ரப் கலந்து கொண்டார்.

அது ‘மல் பூஜா’ எனும் மலர் பூசை நிகழ்வாகும். இதன்போது புத்தரின் சிலைக்கு முன்னால் அஷ்ரப் மலர்த்தட்டு வைத்தார். இதுதான் அந்த சர்ச்சைக்குக் காரணமாகும். அஷ்ரப்பின் இந்த செயற்பாட்டினை இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் விமர்சித்தனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடுமையான கண்டனத்தை வெளியிட்டது. அஷ்ரப்பின் அந்தச் செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பது, உலமாக்கள் பலரின் கருத்தாக இருந்தது.

கதை- 02

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலி, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்காக நாட்டிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் பரிதாபப்பட்டனர்; பிராத்தனை செய்தனர். பௌத்தர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

பௌத்த விகாரையொன்றில் ஆசாத்சாலியின் விடுதலைக்காகப் பிராத்தனை செய்து நடத்தப்பட்ட நிகழ்வொன்றுக்கு, அவரின் குடும்பத்தினர்  அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களும் மரியாதையின் நிமித்தம் அங்கு சென்றனர். அப்போது, ஆசாத்சாலியினுடைய மகளின் கைகளில், யாரோ ஒருவர் மலர் தட்டொன்றினை கொடுக்க, அது – புகைப்படமாக வெளிவந்து விட்டது.

பிறகென்ன, ஆசாத்சாலியின் மகள் பௌத்த விகாரைக்கு மலர்த்தட்டுடன் நேர்த்திக் கடனுக்காகச் சென்றதாக விமர்சனங்கள் எழுதப்பட்டன. இவ்வாறு விமர்சனங்களை எழுதியவர்களில் அதிகமானோர் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள். மு.கா. தலைவருடன் ஆசாத்சாலி கடுமையாக முரண்பட்டிருந்த காலமது.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹஸீர் என்பவரும், தனது பேஸ்புக் பக்கத்தில், ஆசாத்சாலியின் மகள் விகாரைக்கு மலர்த்தட்டுடன் சென்றதாக எழுதி – விமர்சித்திருந்தார்.

மூன்றாவது கதை

மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நசீர் அஹமட் ஒரு ஹாபிஸ். அதாவது புனித குர்ஆனை மனனம் செய்தவர். அதனால் அவரை ‘ஹாபிஸ் நஸீர் அஹமட்’ என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.

சிலை வணக்கம் என்பது இஸ்லாத்தில் கடுமையாக தடுக்கப்பட்டதொரு பாவமாகும். அது அழ்ழாஹ்வால் மன்னிக்கப்படாத பாவமாகவும் உள்ளது. சிலை வணக்கம் பல்வேறு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்,  கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ். ஹாபிஸ் நஸீர் அஹமட், இந்துக்கள் வணக்கும் சிலையொன்றுக்கு மிகவும் சிரித்த முகத்துடன் மாலை அணிவித்த வீடியோ காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

இது குறித்து கடுமையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆசாத்சாலியின் மகளை விமர்சனம் செய்த மு.கா. போராளிகளோ அல்லது மு.கா. தலைவரின் சகோதரர் ரஊப் ஹஸீர் போன்ற வகையறாக்களோ தங்கள் உடலிலுள்ள அனைத்து ஓட்டைகளையும் பொத்திக் கொண்டு, முதலமைச்சரின் ‘சிலை வணக்கம்’ தொடர்பில் ஊமைகளாக இருக்கின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் கிழக்கு முதலமைச்சரின் இந்த செயற்பாடு குறித்து – கண்டும் காணாமல் உள்ளது. அஷ்ரப் காலத்தில் உலமா சபைக்கு இருந்த துணிச்சல், இப்போதைய சபைக்கு இல்லை என்பது வெட்கக் கேடான விடயமாகும் என்று, பலரும் பேசிக் கொள்கின்றனர்.

எவ்வாறாயினும், ஹாபிஸ் நஸீரின் ‘சிலை வணக்கம்’ குறித்து, உலமாக்கள் தமது நிலைப்பாட்டினை தெளிவு படுத்துவதோடு, இது தொடர்பில் இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதையும், உலமாக்கள் கூற வேண்டும்.

மு.காங்கிரசின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், சிலைக்கு மாலையிட்ட செயற்பாடு இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதுதான் என்று, அவரின் கட்சி அபிமானிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் வாதாடி வருகின்றமைதான் இதிலுள்ள உச்ச கட்ட கொடுமையாகும்.

எனவே, ஹாபிஸ் நஸீரின் மேற்படி செயற்பாடு தொடர்பில், ஜம்இய்யத்துல் உலமா சபை காத்துவரும்  ஊமைத்தனத்தை கலைத்து விட்டு, இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட ஒரு அறிக்கையினை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

வீடியோ

Comments