கல்விக் கல்லூரிக்கு உள்ளீர்ப்பதில், இறக்காமம் மாணவர்களுக்கு அநீதி: பொறியியலாளர் மன்சூர்

🕔 March 17, 2017

– றிசாத் ஏ காதர் –

தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை தேர்வு செய்வதில் இறக்காமம் பிரதேச மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பொறியிலாளர் எஸ்.ஐ. மன்சூர் மேலும் கூறுகையில்;

“தேசிய கல்விக் கல்லூரிக்கு வருடந்தம் மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு உள்ளீர்ப்புச் செய்யப்படும் போது பிரதேசங்கள் தொடர்பிலோ அல்லது பிரதேசங்களில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்கள் குறித்தோ கருத்திற்கொள்ளப்படவில்லை. ஆனால் தற்சமயம் பிரதேசங்களில் காணப்படும் ஆசிரிய வெற்றிடங்களை மையப்படுத்தியே இந்த உள்ளீர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தி தேசிய கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதன் மூலம், இறக்காமம் பிரதேசம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்குள்ள மிகத் திறமையான மாணவர்களுக்கான சந்தர்ப்பங்களும் இல்லாமல் போகின்றன.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் அதிகமான ஆசிரியர்கள், சம்மாந்துறை பிரதேசத்திலிருந்தே வருகை தருகின்றனர். இந்த ஆசிரியர்கள் தற்காலிகமானவர்கள். இவ்வாறு கடமைக்கு வருகை தருகின்ற ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான தற்காலிக நியமனமே வழங்கப்படுகின்றது. இதன்படி, இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள், தற்காலிகமாக சம்மாந்துறை பிரதேச ஆசிரியர்களாலே நிரப்பப்படுகின்றன.

தற்போது தேசிய கல்விக்கல்லூரிகளுக்கு மாணவர்கள் பிரதேச ரீதியாக உள்ளீர்ப்புச் செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், இறக்காமம் பிரதேசத்துக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் காண்பிக்கின்றனர். இதனால், இப்பிரதேசத்திலிருந்து தேசிய கல்விக் கல்லூரிக்கு மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட முடியாத நிலை உருவாகியுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பினையும் மாகாண கல்விப் பணிப்பாளரும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளருமே ஏற்க வேண்டும்.

குறிப்பாக மாகாண கல்விப் பணிப்பாளரும், வலயக்கல்விப் பணிப்பாளரும்இ இந்த விவகாரத்தில், இறக்காமம் பிரதேசத்து ஆசிரியர்களை மட்டும் கணக்கிலெக்க வேண்டும். வெளிப்பிரதேசங்களில் இருந்து கடமைக்கு வருபவர்களின் இடத்தினை, வெற்றிடமாக கருத வேண்டும்.

தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்கின்ற விடயத்தில் அரசாங்கம் நெகிழ்வுத் தன்மையுடனும் செயற்பட வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்வது போன்ற நடைமுறைகளை கல்விக் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்ளீப்பதிலும் பின்பற்ற வேண்டும். அதனூடாக ஏதாவது ஒரு தேசிய கல்விக்கல்லூரிக்கு மாணவர்களை உள்ளீர்ப்புச் செய்வதுடன், நாட்டின் எப்பகுதியிலும் ஆசிரியராக கடமையாற்ற பணிக் முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்