மறைக்கப்படாத உண்மைகள், ஜவாத் தலைமையில் வெளியீடு
🕔 March 13, 2017
– எம்.வை. அமீர் –
‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்டாத உண்மைகள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரீடியன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் பெயரில் அண்மையில் புத்தகமொன்று வெளியிடப்பட்டிருந்தது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட், மற்றும் மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோர் ஒன்றிணைந்து, மு.காங்கிரசின் சொத்துக்களை கபளீகரம் செய்துவருவதாக, ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் நூலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேற்படி புத்தகத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்படாத உண்மைகள்’ எனும் நூல் இந்தப் புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காஸிம், கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், ஏ.எல். தவம் மற்றும் ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ. காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்ற புத்தகத்தின், அடுத்த பாகங்கள் எதிர்காலத்தில் இன்னும் பல தகவல்களுடன் வெளிவரவுள்ளதாகவும், இந் நிகழ்வில் கூறப்பட்டது.